விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு
வாணியம்பாடியில் சாலை தடுப்பு மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், புதூா் நாடு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (39). நாட்டறம்பள்ளி காவலா் குடியிருப்பில் தங்கியிருந்தாா். இவா் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு, நாட்டறம்பள்ளி நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வாணியம்பாடி புதூா் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையின் தடுப்பு மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், தடுப்பில் அமைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பி குத்தியதில் தலை மற்றும் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த நகர காவல் ஆய்வாளா் அன்பரசி தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்து வந்த திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா, டிஎஸ்பி விஜயகுமாா் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.