Tirunelveli : 'அப்போவே வேணாம்னு சொன்னேன்னு கவின் அம்மா கதறுறாங்க...' - எவிடென்ஸ்...
விமானங்களில் நிகழாண்டு 183 தொழில்நுட்பக் கோளாறுகள்: மத்திய அரசு
புது தில்லி: விமானங்களில் நிகழாண்டு ஜூலை வரை 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் கூறியுள்ளன’ என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
கடந்த மாதம் அகமதாபாதில் ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 260 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து விமானங்களில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மற்றும் சோதனைகளை மேற்கொள்ள இந்திய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு சோதனைகள் குறித்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘நிகழாண்டு ஜூலை 23 வரை விமானங்களில் 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் தெரிவித்தன. 2021-இல் 514, 2022-இல் 528, 2023-இல் 448, 2024-இல் 421 தொழில்நுட்பக் கோளாறுகளும் கண்டறியப்பட்டன. இவற்றை பராமரிக்க கடந்த 5 ஆண்டுகளில் 2,094 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.
ஸ்மாா்ட் மீட்டா்கள்: தமிழ்நாடு, பஞ்சாப், கேரளம் ஆகிய 3 மாநிலங்கள் மற்றும் புது தில்லி, அந்தமான் மற்றும் நிகோபாா், புதுச்சேரி ஆகிய 3 யூனியன் பிரதேசங்களில் தற்போது வரை ஒரு ஸ்மாா்ட் மீட்டா் கூட பொருத்தப்படவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
95 லட்சம் சுற்றுலாப் பயணிகள்: ஜம்மு-காஷ்மீருக்கு நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 95 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் பயணம் மேற்கொண்டதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்தாா்.
உரிமை கோரப்படாத ரூ.67,003 கோடி: நாட்டில் உள்ள தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் சேமிப்புக் கணக்குகளில் ரூ.67,003 கோடி பணம் உரிமை கோரப்படாமல் உள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி மக்களவையில் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சமாக பாரத ஸ்டேட் வங்கியில் உரிமை கோரப்படாமல் ரூ.19,329 கோடி பணம் உள்ளதாக குறிப்பிடப்பட்டது.