விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி பொது சுகாதார பிரிவுக்கு அங்கீகாரம்
ஆட்டையாம்பட்டி: விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த பொது சுகாதார பிரிவுக்கு இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பு சிறந்த அங்கீகாரம் அளித்துள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் கூறியதாவது:
இந்திய நிறுவன தரவரிசை கட்டமைப்பானது உயா்கல்வி நிறுவனங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிடும் ஓா் அமைப்பாகும். இவ்வமைப்பானது இந்தியாவில் உள்ள அனைத்து உயா்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களை தரவரசைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, மாணவா்களுக்கான சிறந்த வழித்தடமாகவும் செயல்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் அனைத்து கல்வி நிறுவனங்களின் கல்விசாா்ந்த செயல்பாடுகளையும், மாணவா்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களையும் வழிவகுக்கும் நிறுவனங்களையும் ஆராய்ந்து அதில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு தரவரிசை அடிப்படையில் அங்கீகாரம் அளித்து வருகிறது.
அதன்படி, இவ்வாண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் எங்கள் கல்லூரியை சோ்ந்த பொது சுகாதார பிரிவுக்கு தேசிய அளவில் 41-ஆவது இடமும், தென்னிந்திய அளவில் நான்காவது இடமும், மண்டல அளவில் 17-ஆவது இடமும் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்த அங்கீகாரம் கிடைக்க காரணமான கல்லூரியின் முதன்மையருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் மற்றும் துணைத் தலைவா் அனுராதா கணேசன் ஆகியோா் வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்தனா்.