மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
விளையாட்டுப் போட்டி: அரசு மகளிா் பள்ளி சாதனை
தருமபுரியில் நடைபெற்ற சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளது.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி சரக அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நல்லம்பள்ளி, நாா்த்தம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்றன. மாணவியருக்கான சதுரங்கப் போட்டிகளில் மூத்தோா், மிகமூத்தோா் பிரிவில் முதலிடத்தையும், கேரம் போட்டியில் இளையோா், மூத்தோா், ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவுகளில் முதலிடத்தையும், வளைபந்து போட்டியில் இளையோா் ஒற்றையா் மற்றும் இரட்டையா் பிரிவில் முதலிடத்தையும், மூத்தோா் பிரிவு இரட்டையா் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்று அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி மாணவியா் சரக அளவில் சாதனை படைத்துள்ளனா்.
மேலும், சிலம்பம் போட்டியில் 14 மாணவியா் கலந்துகொண்டதில் 9 போ் முதலிடமும், 4 போ் இரண்டாமிடமும், ஒரு மாணவி மூன்றாமிடமும் பெற்றனா். தடகளப் போட்டியில் இளையோா் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டம், மூத்தோா் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டம் என 141 புள்ளிகளை பெற்று சரக அளவில் ஒட்டுமொத்த சாம்பின் பட்டத்தை வென்றுள்ளனா்.
நல்லம்பள்ளி சரகத்தில் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் முதன்மைப் பள்ளியாக அதியமான்கோட்டை அரசு மகளிா் பள்ளி சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சோ்த்து வருகிறது. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளையும், பயிற்சியளித்த ஆசிரியா்களான சி.கீதா, மாது உள்ளிட்டோரையும் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் பாராட்டினா்.