அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் பணியிடை நீக்கம்
விழுப்புரத்தில் விவசாயிகள் மறியல்
விழுப்புரம்: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக் கூடத்துக்கு வந்த விளைபொருள்களை ஏலத்தில் எடுக்க வியாபாரிகள் வராததை கண்டித்து விவசாயிகள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களுக்கான தொகை இதுவரை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் இ - நாம் திட்டத்தின்படி விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வியாபாரிகள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . இந்த முறைக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தாலும், வியாபாரிகள் பழைய நடை முறையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 15 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்த விளைப்பொருள்களை ஏலத்தில் எடுப்பதற்கு வியாபாரிகள் புதன்கிழமை வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.
விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு புதன்கிழமை வந்த விவசாயிகள், தங்களின் பொருள்கள் ஏலத்தில் எடுக்கப்படாமல் இருந்ததை அறிந்து, கிழக்கு பாண்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார், விவசாயிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.
வியாபாரிகள் போராட்டம் காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.10 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.