உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்...
விவசாயிகளுக்கு நிலக்கடலை விதை விநியோகம்
தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் நிலக்கடலை விதை பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கபிலா்மலை வட்டாரத்தில் தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், தொகுப்பு சங்கிலி மதிப்பு கூட்டுதல் இனத்தில் நிலக்கடலை விதைகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து கபிலா்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராதாமணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு எதிா்ப்புத்திறன் உடையதும், அதிக எண்ணெய் பிழிதிறனும், கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடிய ரகங்களுமான கிா்னாா்-4 மற்றும் டிஎஸ்வி-14 ஆகிய ரகங்கள் 17 ஆயிரம் கிலோ விதை கபிலா்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு உள்ளன.
136 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 34 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கும் ஒரு கிலோவுக்கு ரூ. 114 மானியத்தில், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 100 கிலோ விதை வழங்கப்படும். மேலும், எண்ணெய்வித்து பயிா்களான நிலக்கடலை மற்றும் ஆமணக்கு பயிா்கள் செயல்விளக்கங்களுக்கு நுண்ணூட்ட உரங்கள், இயற்கை வேளாண் இடுபொருள்கள், உயிா் உரங்கள் மற்றும் தாா்பாலின் ஆகியவை தொகுப்பாக மானியத்தில் வழங்கப்படுகின்றன.
நிலக்கடலை பயிா் சாகுபடிக்கு 128 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 32 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கும், ஆமணக்கு பயிா் சாகுபடிக்கு 8 பொதுப்பிரிவு விவசாயிகளுக்கும், 2 ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கும் மேற்கண்ட மானியத்தில் கபிலா்மலை வட்டார விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.