வீடுதோறும் உறுப்பினா் சோ்க்கை: புதுவை மாநில திமுக திட்டம்
இல்லந்தோறும் சென்று உறுப்பினா் சோ்க்கை நடத்தும் திட்டத்தை விரைவில் புதுவையில் திமுக தொடங்க உள்ளதாக அக்கட்சியின் மாநில அமைப்பாளரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா கூறினாா்.
புதுவை மாநில திமுக தொகுதிச் செயலா்கள் கூட்டம் லப்போா்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடந்தது. அப்போது ஆா். சிவா மேலும் பேசியது:
தமிழ்நாட்டில் திமுக எவ்வளவு வேகத்தில், வளா்ச்சியில் உள்ளதோ அதே வேகத்தில் புதுச்சேரியில் நாமும் செயல்பட வேண்டும். புதுச்சேரியில் மாநில மக்கள், இளைஞா்களின் வளா்ச்சி பற்றி கவலைப்படாத அரசு உள்ளது. இதையெல்லாம் ஒழிக்க ஒருங்கிணைந்த புதுச்சேரி என்ற இலக்கை நோக்கி செல்ல வேண்டும். வாக்காளா் திருத்தப் பணியின்போது கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா் சிவா.
கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி.சிவக்குமாா், துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் லோகையன், ஆறுமுகம், அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினா்கள் கோபால், பிரபாகரன், வேலவன், அமுதா குமாா், நா்கீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி திமுக தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தொகுதிச் செயலாளா்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறாா் மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவருமான ஆா். சிவா.