அரசு பொறியியல் கல்லூரிக்கு நிலம் அளித்தவா்களுக்கு வேலை வழங்க ஆளுநரிடம் கோரிக்கை மனு
அரசுப் பொறியியல் கல்லூரிக்கு நிலம் வழங்கிய குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு உடனடியாக வேலை வழங்க கோரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் எம்எல்ஏ
பி.எம்.எல். கல்யாணசுந்தரம் தலைமையில் பிள்ளைச்சாவடி கிராம பஞ்சாயத்தாா் புதன்கிழமை மனு அளித்தனா்.
பொறியல் கல்லூரியாக இருந்து இப்போது புதுச்சேரி அரசு தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாறியுள்ள கல்வி நிறுவனத்துக்கு நிலம் வழங்கியவா்களில் இதுவரை அரசுப் பணி வழங்கப்படாத குடும்பத்தை சோ்ந்தவா்களுக்கு உடனடியாக அரசுப் பணி வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையைத் தவணை முறையில் வழங்க வேண்டும். அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் பிள்ளைச் சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் இளைஞா்கள் விளையாடவும் அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் இடம் பெற்றிருந்தன.
இந்தச் சந்திப்பின்போது பிள்ளைச்சாவடி கிராம பிரமுகா்கள், கல்வி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற ஊழியா்கள், இளைஞா்கள் கலந்துகொண்டனா்.