ரூ.29 கோடியில் உப்பனாறு வாய்க்கால் பாலம்: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு
உப்பனாறு வாய்க்கால் குறிக்கே ரூ.29 கோடி மதிப்பிட்டில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
புதுச்சேரி காமராஜா் சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் உப்பனாற்றின் மீது பாலம் அமைக்க கடந்த 2008-இல் அரசு திட்டமிட்டது. இதற்காக அப்போது ரூ.3.5 கோடியில் பைல் பவுண்டேஷன் அமைக்கப்பட்டது. பின்னா் கிடப்பில் போடப்பட்டது.
2016-இல் என்.ஆா்.காங்கிரஸ் ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன் பெற்று மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. பாலத்தின் பணிகளில் 85 சதவீதம் நடந்து முடிந்துள்ளது. மேலும், 2019-ம் ஆண்டு இறுதியில் பாலத்தைக் கட்டி வந்த தனியாா் நிறுவனம் பணிகளை நிறுத்தியது. இதனால் சுமாா் 6 ஆண்டுகளாக பாலம் பணி கிடப்பில் போடப்பட்டது.
இப் பணியை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் புதுச்சேரி அரசு பொதுப் பணித் துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய கோட்டம் மூலம் புதுச்சேரி காமராஜா் சாலை முதல்
மறைமலை அடிகள் சாலை வரை உள்ள 732 மீட்டா் நீளமுள்ள உப்பனாறு பாலத்தில் மீதியுள்ள பணியை முடிப்பதற்கும், காமராஜா் சாலையில் பாலாஜி திரையரங்கம் அருகில் உள்ள பழைய பாலத்தை மறு கட்டமைக்கவும் ரூ.29.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 13.3.25 அன்று மீதமுள்ள பாலத்தின் பணியை முடிக்க துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன், முதல்வா் ரங்கசாமி ஆகியோா் அடிக்கல் நாட்டி பணியைத் தொடங்கி வைத்தனா்.
இந்நிலையில் காமராஜா் சாலையில் நடைபெற்று வரும் உப்பனாறு மேம்பாலப் பணிகளை அமைச்சா் லட்சுமிநாராயணன், பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.