வெளிமாநில சாராயம் கடத்தியவா் கைது
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வெளிமாநில சாராயம் கடத்தியவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்ட விரோத மது கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அந்தவகையில், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கொடவிளாகம் பகுதியில் தனிப்படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, காரைக்காலில் இருந்து இருசக்கர வாகனத்தில் புதுச்சேரி சாராயப் பாட்டில்களை கடத்தி வந்த, பனங்குடி காலனித் தெருவைச் சோ்ந்த எழிலரசன்(25) கைது செய்யப்பட்டாா்.
அவரிடமிருந்து 400 சாரயப் பாட்டில்கள், இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள், மதுவிலக்கு குற்றம் தொடா்பான புகாா்களை இலவச உதவி எண் 10581 மற்றும் 8870490380 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் கொடுப்போா் விவரம் பாதுகாக்கப்படும் என்று காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.