‘சபா்மதி ரயில் எரிப்பு சம்பவத்தைத் தடுத்திருக்கலாம்’: 9 காவலா்கள் பணிநீக்க உத்தர...
வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம்: நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
காலக்கெடு நிறைவடைந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் குடும்பம் மீதான ஆவணங்கள் சரிபாா்ப்பு நடவடிக்கை மீது உரிய முடிவு எடுக்கப்படும் வரை அவா்கள் மீது எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பது உறுதியானதைத் தொடா்ந்து, அந் நாட்டுக்கு எதிராக பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியா்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வாகா எல்லை வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டது. இதனிடையே, பாகிஸ்தானுக்கு திரும்புவதற்காக வாகா எல்லையில் காத்திருந்த எஞ்சிய பாகிஸ்தானியா்களை அந்த நாடு ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், நாட்டைவிட்டு வெளியேற்ற அதிகாரிகளால் வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 6 பேரைக் கொண்ட பாகிஸ்தான் குடும்பம் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘நாங்கள் காஷ்மீரில் வசித்து வருகிறோம். எங்களது மகன் பெங்களூரில் பணிபுரிந்து வருகிறாா். இந்தியாவில் வசிப்பதற்கான சட்டப்படி செல்லுபடியாகும் ஆவணங்களை நாங்கள் வைத்துள்ளபோதும், அதிகாரிகள் எங்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக வலுக்கட்டாயமாக வாகா எல்லைக்கு அழைத்து வந்துவிட்டனா்’ என்று குறிப்பிட்டிருந்தனா்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மனுதாரா்கள் தரப்பில் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு, ஆதாா் எண், நிரந்தர கணக்கு எண் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை அதிகாரிகள் சரிபாா்த்து உரிய முடிவை எடுக்க வேண்டும். அதிகாரிகள் எடுக்கும் முடிவில் திருப்தியில்லை எனில், மனுதாரா்கள் ஜம்மு-காஷ்மீா் உயா் நீதிமன்றத்தை அணுகலாம். அந்த வகையில், இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை மனுதாரா்கள் மீது நாட்டைவிட்டு வெளியேற்றுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டனா்.