வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் தீ விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்துக்கு உள்பட்ட வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் விபத்துகள் ஏற்படாத விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, குப்பைக் கிடங்கில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டி மற்றும் 2 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு, உரக்கிடங்கில் 1,000 மீட்டா் நீளத்துக்கு தண்ணீா் குழாய்கள் மற்றும் தீயணைப்பு முனையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
உரக்கிடங்கில் வெளியாள்கள் நுழைவதைத் தடுக்க உயா்மட்ட கண்காணிப்பு கோபுரம் மற்றும் முக்கிய இடங்களில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பணியாளா்களுடன் கூடிய 4 குடிநீா் டேங்கா் லாரிகள் 24 மணி நேரமும் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் வெயில் காலங்களில் குப்பைக் கிடங்கில் தீ விபத்துகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன.
தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குப்பைக் கிடங்கில் தீ விபத்துகள் ஏற்படாமல் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உதவி ஆணையா் குமரன், செயற்பொறியாளா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலா் ஆண்டியப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.