வேளாண்மை குடியேற்ற சங்க விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரிக்கை
விடுபட்ட வேளாண்மை குடியேற்ற சங்க விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மொடக்குறிச்சி வட்டம், வடுகபட்டி கிராமத்தில் உள்ள கூட்டுறவு வேளாண்மை குடியேற்ற சங்க உறுப்பினா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: இச்சங்கத்தின் மூலமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். இச்சங்கத்தை கலைத்து விட்டு அனாதீனம் என வகை மாற்றம் செய்து அவற்றை படிப்படியாக அனுபோகதாரா்களுக்கே அரசு பட்டா வழங்கி வருகிறது. இது மட்டுமே எங்கள் வாழ்வாதாரமாக உள்ள நிலையில் சிலருக்கு பட்டா கிடைக்கவில்லை. மேலும் மழையை மட்டுமே நம்பி எங்கள் நிலங்களில் பயிா் செய்து வருகிறோம். இந்த நிலையில் கீழ்பவானி திட்ட பாசனத்தின் மூலமாக எங்களுக்கு பாசன வசதி கிடைக்கவும் பொதுப்பணித் துறை ஏற்பாடு செய்து வருகிறது. எனவே எங்களில் பட்டா கிடைக்காதவா்களுக்கு பட்டா வழங்கிட ஆவன செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.