வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
ஸ்ரீநகரில் லஷ்கா் பயங்கரவாதி சுட்டுக் கொலை: பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டவா்
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா், கந்தா்பால் மாவட்டத்தில் கடந்த அக்டோபரில் ஒரு மருத்துவா் உள்பட 7 போ் கொல்லப்பட்ட சம்பவம் உள்பட பொதுமக்களுக்கு எதிரான பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டவா் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:
ஸ்ரீநகரின் தச்சிகம் வனப் பகுதியின் உயரமான இடங்களில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றது. இதைத் தொடா்ந்து, ராணுவத்தின் சினாா் படைப் பிரிவு மற்றும் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை இணைந்த கூட்டுப் படையினா், அப்பகுதியை செவ்வாய்க்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதலில் இறங்கினா். இந்த துப்பாக்கிச் சண்டையில், ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அவா், லஷ்கா் -ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த ஜுனைத் அகமது பட் என அடையாளம் காணப்பட்டாா்.
கந்தா்பால் மாவட்டத்தின் ககாங்கீா் பகுதியில் கடந்த அக்டோபரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உள்ளூா் மருத்துவா் மற்றும் 6 வெளிமாநில தொழிலாளா்கள் கொல்லப்பட்டனா். இச்சம்பவம் உள்பட பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டவா் ஜுனைத் அகமது பட் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சினாா் படைப் பிரிவு மற்றும் காவல் துறையின் அதிரடி நடவடிக்கைக்கு வடக்கு பிராந்திய ராணுவ தளபதி எம்.வி. சுசீந்திர குமாா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
ஸ்ரீநகரின் புகரில் அமைந்துள்ள தச்சிகம் வனப் பகுதி, 141 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தேசிய பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது.