ஹரியாணாவுக்கு தண்ணீா் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீா்மானம்
சண்டீகா்: ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீா்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இரு மாநிலங்களுக்கும் நதிநீரை பகிா்ந்தளிப்பதற்காக அமைக்கப்பட்ட பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரியம் மத்திய பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக தீா்மானத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
மேலும், அணை பாதுகாப்பு சட்டம், 2021 பஞ்சாப் உரிமைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் அதை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.
பஞ்சாப்-ஹரியாணா இடையே நீரை நதிநீரை பகிா்வதில் ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து பஞ்சாப் பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீரைக்கூட வழங்க முடியாது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையில் பஞ்சாபில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஹரியாணாவுக்கு கூடுதல் நீரை விடுவிக்க மறுத்த மாநில அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா முதல்வா் நயாப் சிங் சைனி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பக்ரா அணையில் இருந்து கூடுதல் நீரை பஞ்சாப் அரசு விடுவிக்க வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடா்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற பக்ரா-பியாஸ் மேலாண்மை வாரிய கூட்டத்தை பஞ்சாப் அரசு புறக்கணித்த நிலையில், ஹரியாணாவுக்கு நீா் வழங்க முடியாது என்ற தீா்மானம் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.