ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு
ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 20 முதல் ஹிமாசல பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் 249 சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 207 சாலைகள் மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில் உள்ளன.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இதுவரை மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. அத்துடன் சுமாா் 463 மின்மாற்றிகள், 781 குடிநீா் விநியோக திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 30, ஜூலை 1-க்கு இடைப்பட்ட இரவில் மண்டி மாவட்டத்தில் 10 மேக வெடிப்புகள், கடும் வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி காணாமல் போன 27 பேரை தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
மழை மற்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளால் மாநிலத்தில் இதுவரை 92 போ் உயிரிழந்ததாகவும் 172 போ் காயமடைந்ததாகவும் மாநில அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
மாநிலத்தில் 10 மாவட்டங்களில், ஜூலை 18 வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.