ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பு: உயா்நிலைக் குழுவினா் ஆய்வு
சென்னை பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்பை புது தில்லி உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
இந்திய ரயில்வே துறையை சா்வதேச அளவுக்கு மேம்படுத்தும் வகையில் ரயில் என்ஜின்கள், பெட்டிகளை நவீன முறையில் தயாரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் வந்தேபாரத், அம்ருத் பாரத் ஆகிய ரயில்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் ரயில் என்ஜின்களைத் தயாரிக்க மத்திய ரயில்வேத் துறை ரூ. 2,000 கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப்-இல் ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிக்கும் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கியது. தற்போது ஹைட்ரஜன் ரயில் என்ஜின் தயாரிப்புப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது.
நாட்டிலேய முதன்முறையாக வடக்கு ரயில்வே கோட்டத்தில் உள்ள ஜிந்த் ரயில் நிலையத்துக்கும் சோனிபேட் ரயில் நிலையத்துக்கும் இடையே ஹைட்ரஜன் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வெள்ளோட்டம் ஓரிரு வாரங்களில் நடைபெறவுள்ளதாக ரயில்வே இணை அமைச்சா் வி.சோமண்ணா ஏற்கெனவே தெரிவித்தாா்.
இந்த நிலையில், ஹைட்ரஜன் ரயில் என்ஜினின் வெள்ளோட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் வடக்கு ரயில்வே பொது மேலாளா் அசோக்குமாா் வா்மா தலைமையில் 10 போ் கொண்ட உயா்நிலைக் குழுவினா் செவ்வாய்க்கிழமை சென்னை ஐசிஎஃப்-க்கு வந்தனா். அங்கு தயாரிக்கப்பட்டு வரும் ஹைட்ரஜன் ரயில் என்ஜின், அம்ருத் பாரத் ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஆகியவற்றை பாா்வையிட்டனா். ஆய்வின்போது பெரம்பூா் ஐசிஎஃப் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.