1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே! கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரிப்பு!
ஹரியாணாவில் பல கிராமங்களில் 1,000 ஆண்களுக்கு 700 பெண்கள் மட்டுமே என்கிற விகிதத்தில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
அங்குள்ள பல கிராமப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 481 கிராமங்களில் பாலின விகிதாச்சாரம் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஹரியாணாவில் பிறப்பு விகிதத்தை ஆய்வு செய்தபோது, ஆயிரம் ஆண் குழந்தைகள் பிரசவிக்கிறது எனில் அதை ஒப்பிடும்போது 700-க்கும் குறைவான பெண் குழந்தைகளே பிறக்கின்றன.
ஹரியானாவில் வடக்கு மற்றும் வட கிழக்கு மாவட்டங்களில் அமைந்துள்ள கிராமங்களில் இதுவே கள யதார்த்தம் என்கிறது ஆய்வு முடிவு.
ஹரியாணாவில் மொத்தமுள்ள 6,842 கிராமங்களில், ஆம்பாலா மாவட்டத்தில் 54, அதனையொட்டியுள்ள யமுனாநகர் மாவட்டத்தில் 53, பஞ்ச்குலா மாவட்டத்தில் 38 கிராமங்கள், ஹரியாணாவின் தென்மேற்கு பகுதியிலுள்ள பிவானி மாவட்டத்தில் 46 கிராமங்கள், மஹேந்தர்கர் மாவட்டத்தில் 42 கிராமங்களில் பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்துள்ளது.
மேற்கண்ட அனைத்து கிராமங்களும் ஹரியாணாவின் எல்லையோரப் பகுதிகளாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது. அதன் அண்டை மாநிலங்களான தெற்கே ராஜஸ்தான், வடக்கே பஞ்சாப், ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநில எல்லைகளையொட்டி இந்த கிராமங்கள் அமைந்திருக்கின்றன.
இதனால் இங்குள்ள மக்கள் எளிதில் அந்த மாநிலங்களுக்குச் செல்ல முடிகிறது. அங்கு செல்லும் அவர்கள், மருத்துவப் பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் ஆணா அல்லது பெண்ணா என்பதை முன்கூட்டியே அறிந்து, பெண்ணாக இருப்பின் சட்டத்துக்குப் புறம்பாக கருவைக் கலைத்துவிடும் சம்பவங்களும் சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது.
இதற்கான தீர்வு, அனைத்து மாநிலங்களின் கூட்டு நடவடிக்கையால் மட்டுமே எட்டப்பட முடியும் என்கின்றனர் சுகாதாரத் துறை அதிகாரிகள். பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ஹரியாணாவில், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலின விகிதாச்சார இடைவெளி அதிகரித்திருப்பதையடுத்து, இதனை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு எடுக்க வேண்டுமென்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.