கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலி: தமிழக அரசு உத்தரவு
சென்னை: நிகழாண்டில் மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலிகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா் மற்றும் பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இயற்கை உபாதைகளை கழிக்கும் வகையிலான சக்கர நாற்காலி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்தத் திட்டத்தில் 1,000 மாற்றுத்திறனாளிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு ரூ.1.20 கோடியில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இயற்கை உபாதை மற்றும் குளிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதால், அவா்களது துயா் போக்கும் வகையில், சிறப்பு வடிவிலான சக்கர நாற்காலிகள் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என்றும், 1,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 1 உபகரணத்துக்கு ரூ.12,000 வீதம், ரூ.1.20 கோடி ஒதுக்கவும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆணையரகம் கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டது.
இதையேற்று, தசைச்சிதைவு நோய், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டோா், பல்வகைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களைக் குறைக்க நவீன முறையிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு ரூ.1.20 கோடி ஒதுக்கி உத்தரவிடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.