ஓட்டப்பிடாரம் அருகே தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா்
1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கல்: 2 போ் கைது
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சுமாா் 1.4 டன் ரேஷன் அரிசி பதுக்கியதாக 2 பேரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
முத்தையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் தலைமையிலான போலீஸாா், முத்தையாபுரம் வடக்கு தெருவில் சோதனை மேற்கொண்டனா். அங்கு ஓரிடத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தை சோ்ந்த கணேசன்(30), முத்தரசன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த தலா 35 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் இருந்த மொத்தம் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், அவா்கள் முத்தையாபுரம் சுற்றுவட்டாரங்களில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆடு, மாடு பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.