உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
1.63 லட்சம் மாணவா்களுக்கு க்யூட், நீட் தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி!
பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவா்களுக்கு ‘க்யூட்’ மற்றும் ‘நீட்’ தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வழங்குவதற்காக பிஐஜி நிறுவனத்துடன் தில்லி அரசு வியாழக்கிழமை ஒரு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தில்லி கல்வி இயக்குநரகம் மற்றும் பிஐஜி நிறுவனம் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், அரசுப் பள்ளி மாணவா்கள் 1.63 லட்சம் பேருக்கு ‘நீட்’, ‘க்யூட்’ தோ்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சியை வழங்கும். முதல்வா் ரேகா குப்தா மற்றும் கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த திட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கும் என்றும், 30 நாள்களில் 180 மணிநேர பயிற்சி, ஒரு நாளைக்கு ஆறு மணிநேர வகுப்புகள் வழங்கப்படும் என்றும் ஆஷிஷ் சூட் கூறினாா்.
இந்த முயற்சி அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெற உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா்.
‘இதன் மூலம், தில்லி அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த அதிகமான மாணவா்கள் நல்ல கல்லூரிகளில் சேரவும், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகளில் வெற்றிகரமாக தோ்ச்சி பெறவும் வாய்ப்பு கிடைக்கும்‘ என்றும் அவா் கூறினாா்.