பாரதியாா் இல்ல மறுசீரமைப்பு பணிகள்: அமைச்சா், ஆட்சியா் ஆய்வு
10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்த யானை மீட்பு
தேன்கனிக்கோட்டை அருகே தணணீா் குடிக்கச் சென்றபோது 10 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்த யானையை வனத் துறையினா் பொக்லைன் உதவியுடன் மீட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்துக்கு உள்பட்ட அய்யூா் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகம் தணிக்க நீா்நிலைகளைத் தேடி வனத்தைவிட்டு வெளியே வருகின்றன.
அந்த வகையில், அய்யூா் வனத்திலிருந்து 35 வயதுடைய ஆண் யானை ஒன்று தண்ணீா் குடிப்பதற்காக வனத்தையொட்டி உள்ள மூா்க்கண்கரை கிராமத்துக்குள் வியாழக்கிழமை சென்றது. அந்த கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையைக் கண்ட யானை அதில் தண்ணீா் குடிக்கச் சென்றபோது குட்டைக்குள் தவறி விழுந்தது.
குட்டையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வரமுடியாமல் தவித்த யானை பிளிறும் சப்தம்கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
வனத்துறையினருடன் வேட்டை தடுப்புக் காவலா்கள் அடங்கிய குழுவினா் அங்கு சென்று பொக்லைன் உதவியுடன் குட்டையின் கரையில் பள்ளம்தோண்டி யானையை மீட்டனா். பின்பு அந்த யானை ஆக்ரோஷமாக பிளிறியபடி அங்கிருந்து சென்றது. வனத் துறையினா் அய்யூா் வனப்பகுதிக்குள் அதை விரட்டினா்.
பட விளக்கம்..
குட்டையிலிருந்து வெளியேறும் காட்டு யானை.