130th Amendment: ``நாம் மன்னர் காலத்துக்குச் சென்றுவிட்டோம்" - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி
மழைக்கால கூட்டத்தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் மூன்று முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர், மாநில அமைச்சர்கள் ஆகியோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மசோதாவின் படி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றங்களில் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து 30 நாள்கள் காவலில் வைக்கப்பட்டால், 31-வது நாள் அவர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவர். இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் கருப்பு நிற உடையில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``அரசியலமைப்பைத் தாக்குபவர்களுக்கும் அரசியலமைப்பைப் பாதுகாப்பவர்களுக்கும் இடையே ஒரு சண்டை நடந்துக்கொண்டிருக்கிறது.
நாங்கள் சுதர்ஷன் ரெட்டியை ஆதரிக்கிறோம், மேலும் அவர் மிகவும் உறுதியாக தேர்தலில் போட்டியிடுவார். நாங்கள் வழங்க விரும்பும் செய்தியை நாடு காணும் என்றும் நான் நம்புகிறேன். ஒவ்வொரு கட்சியும் ஒருமனதாக சுதர்ஷன் ரெட்டியை ஆதரித்துள்ளன.
அவர் தெலங்கானாவில் சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பணியாற்றியவர். தெலங்கானாவிற்கான சமூக நீதிக்கான ஒரு பார்வையை உருவாக்க உதவியவர். சுதர்ஷன் ரெட்டி பற்றி பல விஷயங்களைச் சொல்லலாம். அவருக்கு பல ஆண்டுகளாக நீதித்துறை மற்றும் சட்ட அனுபவம் உள்ளது.
அவர் அரசியலமைப்பை மதிக்கக்கூடியவர். தற்செயலாக அவரது சட்டைப் பைக்குள் பார்த்தேன். அதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிறிய வடிவமைப்பு இருந்தது. அவர் எல்லா இடங்களுக்கும் அதை எடுத்துச் செல்கிறார்...
இது பற்றி நான் ஒருமுறை அவரிடம் பேசியபோது, 'ராகுல், நான் 52 ஆண்டுகளாக என் சட்டப் பையில் அரசியலமைப்பை எடுத்துச் செல்கிறேன்... ஏனெனில், எந்தவொரு சட்டப்பூர்வ உரையாடலிலும், அரசியலமைப்பு இறுதி பதிலைக் கொண்டுள்ளது' என்றார்.
அதன் பிறகே அவரை துணை குடியரசுத் தலைவராக்க தேர்வு செய்தோம். நாம் ஏன் ஒரு புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
நேற்று நான் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பழைய துணைக் குடியரசுத் தலைவர் எங்கே போய்விட்டார் எனக் கேட்டதற்கு, அவர் போய்விட்டார் என்று மட்டும்தான் பதில் வந்தது.
அவர் ஏன் ராஜினாமா செய்தார் என்பது பற்றி ஒரு பெரிய கதை இருக்கிறது. உங்களில் சிலருக்கு அது தெரிந்திருக்கலாம், சிலருக்குத் தெரியாமலும் இருக்கலாம்.
அவர் ஏன் தலைமறைவாக இருக்கிறார்... இந்திய துணைக் குடியரசுத் தலைவர் ஏன் ராஜினாமாவுக்குப் பிறகு ஒரு வார்த்தை கூட பேச முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்?
மாநிலங்களவையில் வெடித்துப் பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென அமைதியாகிவிட்ட காரணம் என்ன? இது எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.
நாம் மன்னர்கள் வாழ்ந்த இடைக் காலத்துக்குச் சென்றுவிட்டோம். சர்வாதிகார மன்னன் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் இல்லாமல் ஆக்கலாம்.
அவர் யார்? யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது எதுவும் தேவையில்லை. பிடிக்கவில்லை என்றால் அவரை இல்லாமல் ஆக்கிவிடலாம்.
பா.ஜ.க முன்மொழியும் புதிய மசோதாவை யாருடைய கருத்துக்கும் மதிப்பளிக்காமல் செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த மன்னருக்கு உங்கள் முகம் பிடிக்கவில்லை என்றால் அவர் ED-யிடம் வழக்குத் தொடரச் செய்து, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை 30 நாள்கள் சிறையில் அடைக்கச் செய்வார். அதன்பிறகு அவரை இல்லாமல் ஆக்கிவிடுவார்" என்றார்.