``2 மாதங்களில் 185 கொலைகள், பெண்களுக்கு எதிராக 273 புகார்கள்..'' - எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி பெரியகுளம் ரோட்டில் மதுராபுரில் நடந்தது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சி இருண்டகால ஆட்சி என்று ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். தேனி மாவட்டத்திற்கு வந்து பாருங்கள். ஜெயலலிதா ஆட்சியில் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் கொண்டுவந்துள்ளோம். 18-ம் கால்வாய், 58 -ம் கால்வாய் திட்டம் கொண்டுவரப்பட்டது. வீரபாண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது. முல்லைப்பெரியாறு அணைக்காக சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை பெற்றிருக்கிறோம். அதிமுக ஆட்சி நடந்திருந்தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டிருக்கும்.

தமிழக முழுவதும் போதைப்பொருள் விற்பனை
ஆனால் ஸ்டாலின் அவர்கள் எப்போது பார்த்தாலும் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருக்கிறார். ஒன்றுமே செய்யாத பொம்மை முதலமைச்சராக உள்ளார். இது திராவிட மாடல் அரசு அல்ல ஸ்டாலின் மாடல் அரசு. இந்த ஆட்சி வந்த ஒரே வருடத்தில் நான் எச்சரிக்கை விடுத்தேன். தமிழக முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துங்கள். இல்லாவிட்டால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும் போதைக்கு அடிமையாகி பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரித்தேன்.
`எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை'
இன்றைய தினம் ஸ்டாலின் மாணவர்களையும், இளைஞர்களையும் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று தொலைக்காட்சியில் அறிவிப்பு வெளியிடுகிறார்.நான் மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சொன்னேன்.போதையை இரும்புக் கரம் கொண்டு தடுத்து நிறுத்துங்கள் என்று எச்சரித்தேன். ஆனால் கண்டுகொள்ளவில்லை. போதைக்கு அடிமையாகி கஞ்சாவிற்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொலை, கொள்ளை,பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் நடைபெறுகின்றன.

எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை. பள்ளியில் படிக்கிற மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு ஒட்டுமொத்த ஆசிரியர்களின் பெயரையும் கெடுக்கும் விதத்தில் உள்ளது. பெண்களைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அச்சத்துடன் அனுப்பும் நிலை உள்ளது. அதையெல்லாம் ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை.
`சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது'
ஸ்டாலின் இப்போது அப்பா அப்பா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொண்டிருக்கும்போது அப்பா அப்பா என்று கதறிக் கொண்டிருக்கும்போது இந்த ஸ்டாலின் எங்கே போனார்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் தமிழகத்தில் 185 கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதேபோல பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த இரண்டு மாதங்களில் 273 புகார்கள் பதிவாகியுள்ளன. ஆக இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.
ஆட்சியருக்கே பகிரங்க மிரட்டல்..
இன்றைக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் உயர் அதிகாரியான பெண், தன் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்ற சொல்லுகிற அவலமான நிலை நிலவுகிறது. அப்படிப்பட்ட உயர் பதவியில் இருக்கிற பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன ஆகும் என்ற எண்ணிப் பார்க்க வேண்டும். பொம்மை முதலமைச்சர் ஆளுகிற தமிழகம் இன்றைக்கு அலங்கோலமாக இருக்கிறது. இது மிகவும் வேதனையாக உள்ளது.

நேற்றைய தினம் தர்மபுரியில் திமுக மாவட்ட செயலாளர் பேசுகிறார், என் சொல்லுக்கு கட்டுப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் என்றாலும் காவல்துறை கண்காணிப்பாளர் என்றாலும் இந்த இடத்தில் இருக்க மாட்டீர்கள். நடப்பதே வேறு என்று பகிரங்கமாக மிரட்டுகிறார். அப்படி என்றால் அதிகாரிகள் எப்படி சுதந்திரமாக செயல்படுவார்கள்? ஒரு சில அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்யலாம் என்று நினைத்தாலும் திமுக அரசு நேர்மையாக இருக்க விடுவதில்லை" என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
