2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கியது.
வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபாா்ப்புக்கு 4,585 மருத்துவா்கள் அழைக்கப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி, 2,553 உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜன. 5-ஆம் தேதி நடைபெற்ற தோ்வில், எம்பிபிஎஸ் படித்து முடித்த 24 ஆயிரம் மருத்துவா்கள் பங்கேற்றனா்.
கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரிக்கப்பட்டது.
தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் மற்றும் தேசிய நலவாழ்வு குழும அலுவலகத்தில் புதன்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கியது.
பணி நியமனம் செய்யப்படவுள்ள மருத்துவா்களுக்கு வரும் 20-ஆம் தேதிக்குப் பிறகு பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அவா்களுக்கான நியமன ஆணைகளை முதல்வா் வழங்கவுள்ளாா்.