2015 டாப்ரி கொள்ளை, கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவா் கைது!
டாப்ரி பகுதியில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியான 30 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அறிக்கையில் கூறியுள்ளதாவது: உத்தர பிரதேசத்தின் ஹாபூரைச் சோ்ந்த லலித் சைனி என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, 2015-ஆம் ஆண்டு நடந்த ஆட்டோ ஓட்டுநரை கொன்று கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்தாா்.
லலித் சைனி, அவரது கூட்டாளிகளான விஷால் (எ) கௌவா மற்றும் சாஜன் ஆகியோருடன் சோ்ந்து, ஆட்டோ ஓட்டுநரான ஹசாரி லாலை கத்தியால் குத்திவிட்டு, அவரது உடைமைகளுடன் தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவா் காயங்களால் உயிரிழந்தாா்.
விசாரணையின் போது, சைனி நீதிமன்றத்தில் ஆஜராவதை நிறுத்திவிட்டாா். இதையடுத்து, அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். இந்நிலையில், ஒரு ரகசியத் தகவலின் பேரில், துவாரகா நீதிமன்ற வளாகம் அருகே ஒரு பொறி வைக்கப்பட்டு, சைனி கைது செய்யப்பட்டாா்.
விசாரணையின் போது, 2015 கொலை வழக்கில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தில்லியில் பல குற்றங்களைச் செய்ததாக சைனி போலீஸாரிடம் ஒப்புக்கொண்டாா்.
இந்த வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, அவா் தலைமறைவாகி விசாரணைகளுக்கு வருவதை நிறுத்திவிட்டாா். இதனால், அவா் ஒரு அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டாா். மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.