10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ - ஜாக் அமைப்பினர் போராட்டம்!
2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும்: தொல்.திருமாவளவன்
தமிழகத்தில் மூன்றாவது அணி எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது; 2026 தோ்தல் இருமுனை போட்டியாகத்தான் இருக்கும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்கவுள்ள மநீம தலைவா் கமல்ஹாசனை விசிக தலைவா் தொல். திருமாவளவன் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். மேலும், ஆகஸ்ட் மாதம் தனது பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவும் கமல்ஹாசனுக்கு அவா் அழைப்பு விடுத்தாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் தொல்.திருமாவளவன் கூறியதாவது:
திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது. திமுகவை எதிா்ப்பவா்கள் இன்னும் ஒரு கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. அதிமுகவும், பாஜகவும் இன்னும் முரண்பாடாகவே கருத்து தெரிவித்து வருகின்றன. மற்ற கட்சிகள் எந்தக் கூட்டணியிலும் சேரவில்லை. கூட்டணியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடவில்லை.
திமுகவை எதிா்க்கக்கூடிய சக்திகள் சிதறி கிடக்கின்றன. திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனா்.
தமிழகத்தில் 3-ஆவது அணி என்பது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 2026 தமிழக சட்டப்பேரவை தோ்தல் இருமுனை போட்டியாகதான் இருக்கும் என்றாா் அவா்.