காந்தி நினைவு அருங்காட்சியக சீரமைப்புப் பணி அக்டோபரில் நிறைவடையும்: அமைச்சா் மு...
29Cயை ஏக்கத்துடன் எட்டிப் பார்க்கிறேன்! - சென்னை பெண்ணின் நெகிழ்ச்சி நினைவலை | #ChennaiDays
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
29C, மயிலாப்பூர் டேங்க்
நல்லப்பன் தெரு, மயிலாப்பூர், சென்னை - 600004.
1985-2001 காலத்தில், இது என் பூலோக சொர்க்கத்தின் முகவரி!
நான் பிறந்தது சென்னை இசபெல்லாவில். என் அய்யா-ஆயா(தாத்தா-பாட்டியை நாங்கள் இப்படித்தான் அழைப்போம்) பல ஆண்டுகளாக சென்னைவாசிகள். முன்பு ஆழ்வார்ப்பேட்டையில், நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்களின் இல்லத்தின் அருகில் குடியிருந்தார்கள். பின்பு நாங்கள் குடியேரியது இவ்விடம். எனக்கு வயது 10 இருக்கும் அப்போது.
அப்பா சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிந்ததால், நான் பள்ளி-கல்லூரி இரண்டுமே படித்தது சிதம்பரத்தில் தான். டிசம்பர், கோடை விடுமுறைகளுக்கு தேவகோட்டையில் உள்ள அப்பாத்தா வீட்டிற்கோ, சென்னையில் உள்ள ஆயா வீட்டிற்கோ சென்றுவிடுவேன். மாமா, அத்தை பிள்ளைகள் பெருங்கூட்டம் இரு தரப்பிலும்.

அதிகாலையில் அய்யா எங்கள் அனைவரையும் (கிட்டத்திட்ட 10 பேரன்-பேத்தியர்) நடை பயணமாய் சேந்த்தோம் பீச்சிற்கு அழைத்துச் செல்வார். பொன்னென மின்னும் காலைச் சூரியனின் மஞ்சள் ஒளியில், காலார நடந்து, கடல் அலையோடு ஓடிப்பிடித்து விளையாடி, உரக்கக் பேசி அளவளாவி, மணல் வீடு கட்டி, கட்டிய வீட்டின் இருபுற வாசல் வழி இருவர் கைகோர்த்துக் குலுக்கி, கடாவாய்ப்பல் தெரிய சிரித்து அசந்து போய்விடுவோம்.
வீடு திரும்புகையில் உடல் அசதியில் உழன்றாலும், வாய் அசருவதில்லை. பேசிப் பேசி பேசிக்கொண்டே இருப்போம்! அசந்த உடலுக்கு ஆளுக்கொரு கோன் ஐஸ்கிரீம், தலைக்கு ரூ. 2/- வீதம் அன்பாய் வாங்கித் தருவார் அய்யா. உடைந்த கோனை தெருவில் விழுந்து விடாமல், பிசுக் பிசுக்கென இருக்கும் இரு கை கூப்பி காப்பாற்றி, சட்டை வரை வழியும் க்ரீமை சட்டையே செய்யாமல் ஆடி அசைந்து வீடு வந்து சேருவோம்.
சில வருடங்கள் கழித்து...எங்கள் அனைவருக்கும் வயது கூடியது! எல்லா குழந்தைகளையும் விட நான் சில வருடங்கள் மூத்தவள். ஆகையால் தி.நகருக்கு ஷாப்பிங் செல்லக் கிளம்பும் என் அம்மா, சித்தி, மாமி, மாமா, அய்யா எல்லோரும் இந்த நண்டு சிண்டுகளை மேய்க்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிட்டு, ஏதோ முக்கியமான வேலையாக ஒருவரை சந்திக்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு (இன்று வரை எங்களுக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்!) எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு 29C பஸ்ஸை மயிலாப்பூர் டேங்க் ஸ்டாப்பில் ஏறுவேன்.
கண்டக்டர் என்னை 'சின்ன வீடு' பட பாக்யராஜ் ரேஞ்சிற்குப் பார்ப்பார்! கண்டக்டர் கடுப்பாவதிலும் ஒரு நியாயம் இருக்கிறது...
காரணம், பாதி பேருக்கு டிக்கெட் எடுக்கும் வயதே வந்திருக்காது! மீதியோ அரை டிக்கெட்!!
29C சென்னையின் ப்ரதானமான, அப்போதைய சென்ட்ரல் பகுதிகளை கவர்வதால், திக்குமுக்காடச் செய்யும் கூட்டம் இருக்கும் எப்போதும். "சட்டுன்னு ஏத்தும்மா!", என்று சத்தம் போடும் கண்டக்டருக்கு பயந்து, முண்டியடித்து அனைவரையும் தூக்கிவிட்டும், ஏற்றி விட்டும் நான் கடைசியாக ஏறுவேன். கூட்டத்தின் இடுக்கில் சில குட்டிகள் சிக்கி நசுங்கும் முன், வயதின் ஏறுவரிசைபடி ஒவ்வொருவராய் அமரச் செய்வேன்.
கடைக்குட்டிகளை சீட்டில் அமர்ந்திருக்கும் யாரேனும் மாமா, மாமியின் மடியில் அமர வைத்துவிடுவேன். என்னை விட்டு விலக விருப்பமின்றி அழுகை எழும். "அடுத்த ஸ்டாப்ல எறங்கிடுவோம். அது வரைக்கும் உக்காந்துக்கோ. உன்ன தூக்கிட்டு என்னால நிக்க முடியாது. ப்ளீஸ்", என்று சமாதானப்படுத்துவேன்.

அடுத்த செட் புரிந்து கொள்ளக்கூடிய பிள்ளைகளிடம், "டேய், பாலு, கார்த்து, வித்யா, அரவிந்த், வள்ளி நீங்க அஞ்சு பேரும் என்ன பாத்துட்டே இருங்க. யாரு எழுந்துக்குற மாதிரி ரெடி ஆகுறாங்களோ, அந்த இடத்த என் கண்லயே காமிப்பேன். டக்குன்னு போய் அவங்க பக்கத்துலயே ரெடியா நின்னுக்கணும். அவங்க எழற மொமென்ட் உடனே உக்காந்திரணும்", என்று வீட்டிலிருந்து டேங்க் ஸ்டாப் செல்லும் வழியில் அட்வான்ஸ் அறிவுரை வழங்கி இருப்பேன்.
இவ்வளவும் நடக்க வேண்டியது... ஸ்டாப்பே இல்லாமல் சிக்னலிலோ, ட்ராஃபிக்கால் பஸ் நடுவழியில் சற்று நேரம் நின்றாலோ, அங்கு உள்ள மீனாட்சி டெக்ஸ்டைல்ஸ் அல்லது வேறு கடைக்காக இறங்கும் அந்த ஒரு சிலரை நம்பித்தான். ஏனெனில், நாங்கள் தான் அடுத்த ஸ்டாப்பான லஸ்ஸில் இறங்கி விடுவோமே!
அட்வைஸை ஏதோ அவர்களுக்குப் புரிந்த வகையில் சிலர் நடைமுறைப்படுத்தவர். கார்த்துவோ, "அவன் போகட்டும். இவள் அடுத்து போகட்டும். நாம் அலமு (நான்) அக்காவுடனேயே நின்று கொள்வோம்...", என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு என் கால்களை விட்டு அகலாமலும், எழுந்திருப்போரை கவனிக்காதவன்போலும், அதை நான் புரிந்து கொள்ளவே இல்லை என்பது போலும் நிற்பான்!!
இப்படியாக ஒவ்வொருவராய் அமர்த்தி இறுதியாக கிடைத்த ஸீட்டில் நான் அமர, என் மடியில் கார்த்து. அப்படி ஒரு எதிர்காற்றை எங்கள் இருவரின் முகமும் அனுபவிக்கும் அடுத்த நொடியே, "வ்ஷ்ஷ்ஷ்", எனக் கேட்டுவிடும் விசில் சத்தம்! "லஸ் லாம் இறங்குங்க...", என்பார் கண்டக்டர்.
"இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா தா என்ன? என்ன அவசரம், ஏன் அவசரம் ஏ, பெண்ணே!", என்று கார்த்துவின் மனதில் ஓடியிருக்கக்கூடிய பாடலை பாஸ் செய்துவிட்டு, பள்ளி வாகனத்திலிருந்து இறக்கப்படும் குழந்தைகள் போல அனைவரையும் வரிசையாய் இறக்கிவிடுவேன்.
லஸ் கார்னரில் இறங்கி, பீச் சோ, நாகேஸ்வரராவ் பூங்காவோ, நவசக்தி விநாயகர் கோவிலோ, ரோட் சைட் ஷாப்பிங்கோ முடித்துவிட்டு திரும்புகையிலும் இதே போன்றதொரு 29C தான்! அதுவும் அதே கண்டக்டர், அதே வண்டி என்றதால் எங்களுடன் பிஃரெண்ட் ஆகி விட்டனர் ஓட்டுனரும் நடத்துனரும்! திரும்பும் சமயம் அரை டிக்கெட் எல்லாம் அரை தூக்கத்தில் இருக்கும்!
பெசன்ட் நகரில் தொடங்கி பெரம்பூர் வரை செல்லும் 29C யில், நாங்கள் பயணித்ததென்னவோ அதிகபட்சமாக, மந்தவெளி, மயிலை, கத்திடரல் ரோடு வரை தான். ஆனால் அதில் பயணித்த அனுபவம் அலாதியானது.
பின்பு நான் கல்லூரி முடித்து வேலை தேடி வந்த போது, அதே அய்யா வீட்டில் தான் தங்கி இருந்தேன். என் அய்யாவிற்கு சென்னை முழுக்க அத்துப்படி! எதைக் கேட்டாலும் அவரால் விரிவான, குழந்தைக்கும் புரியும் படியான விளக்கத்தைச் சொல்லிவிட முடியும். நடமாடும் அன்றைய கூகுள் அவர்! எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் எந்த ஸ்டாப், எந்த நேரம், எந்த ரூட், எவ்வளவு கூட்டம், ஏன்? எவ்வளவு கட்டணம் என்று கூட புட்டு புட்டு வைப்பார்!
அப்படியே அவர் சொல்வதை கவனமாகக் கேட்டு பின்பற்றினால் போதும். சென்னையின் எந்த மூலைக்கும் இலகுவாக சென்றுவிடலாம்.
இதுநாள் வரை மயிலை, மந்தவெளி, லஸ் மட்டுமே தனியாக போய் வர பழகியிருந்த நான், இம்முறை திறந்தவெளி வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கோ அல்லது அவர்கள் நடத்தும் மாபெரும் அளவிலான ஆப்டிட்யூட் டெஸ்ட், க்ரூப் டிஸ்கஷன், இன்டர்வ்யூவிற்கோ சென்னை முழுக்க செல்ல வேண்டியிருந்தது. மற்ற நண்பர்கள் அதற்கு வர சிரமப்பட்டாலும், அய்யா என்கிற கூகுள் மேப் என்னிடம் இருந்ததால், எனக்கு எல்லாம் சுலபமே!
இதில் வேடிக்கை என்னவென்றால், பெரும்பாலான இடங்களுக்குச் செல்ல நான் மீண்டும் ஏற வேண்டியிருந்தது 29C தான்! 29C ராசியாலோ என்னவோ, வேலையும் உடனே கிடைத்துவிட்டது! வந்தாரை வாழவைக்கும் சென்னை, என்னையும்...
ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை. அந்த அலுவலகக் கட்டிடம் பல இடங்களில் இருந்தாலும், எங்கள் ட்ரெயினிங் பீரியட் கத்திடரல் ரோடு சி.எஸ்.ஐ. பில்டிங்கில் தான். பிறகு என்ன? மீண்டும் 29C!
சென்னை MTC பேருந்துகளில் ஒரு பெரிய சினிமாவே எடுத்து விடலாம். அவ்வளவு சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறும்! அத்தனை உணர்ச்சிகளும் வெளிப்படும் விதவிதமான மனிதர்களால். பெரும்பாலும் பஸ் என்றாலே, ஆண்கள் தவறான பார்வை பார்ப்பதும், சீண்டுவதும், பிக்பாக்கெட் அடிக்கும் காட்சிகள் தான் நம் கண் முன் நிற்கும்!
ஆனால் நான் கண்டது, காண்பது வேறொரு கண்ணோட்டத்தில்... ஒரு நல் உலகை. ஒவ்வொன்றையும் அவ்வளவு ரசிப்பேன்!
காலை அலுவலகம் செல்ல அதில் பயணிக்கும் என்னைப் போன்ற பலர் பரபரப்பாகவே வீட்டில் இருந்து கிளம்பி ஓடி வந்து பஸ்ஸைப் பிடிப்போம். பஸ் ஸ்டாப்பின் எதிர்ப்புரம் தான் எங்கள் வீடு என்பதால், நான் அவ்வளவு பிஸியான நேரத்தில் ரோட்டை க்ராஸ் செய்வதற்குள், பஸ்ஸை விட்டுவிடும் நிலைமை இருக்கும். இருந்தும் "நிதானமா க்ராஸ் பண்ணும்மா. நா வெயிட் பண்றேன்", என்பது போல சைகை காமித்துக் காத்திருப்பார் ஓட்டுனர் அண்ணன்! பத்திரமாய் க்ராஸ் செய்து "தேங்க்ஸ் அண்ணா!", என்றபடி ஏறிடுவேன். ஏறியதும் உடனடியாக பெண்களுக்காக தன் இடத்தை விட்டுக்கொடுக்கும் ஆண்கள் எத்தனையோ பேர்!
இன்றும், எனக்கு இருக்கை கிடைத்ததும், யார் கையில் ஹேண்ட்பேக், லஞ்ச் பேக், குழந்தை அல்லது பள்ளி செல்லும் பிள்ளைகளின் ஸ்கூல் பேக் என எதுவானலும் நான் வாங்கி வைத்துக்கொள்வேன்.

ஏறியதும், நம் ஸ்டாப்பிங் வருவதற்குள் டிக்கெட்டிற்கான கட்டணத்தை ரிலேவில் பல கை மாற்றி, இறங்குவதற்குள் டிக்கெட்டை ரிவர்ஸ் ரிலேவில் பெற்றுவிடுவதில் தான் இருக்கிறது அன்றைய நம் வெற்றி!
ஒவ்வொரு நடத்துனரும் "நீ நடந்தால் நடை அழகு" பாட்டில் வரும் ரஜினிகாந்த் போலத்தான் அப்பொழுதெல்லாம். அவரைச் சுற்றி பயணிகள் மொய்த்துவிடுவர்!
ஐந்துவிரல் இடுக்குகளின் உபயோகம் எனக்கு சென்னை பேருந்து நடத்துனர்களைப் பார்த்த பின் தான் புரிந்தது! அவ்வளவு லாவகமாக ரூ. 1, 2, 5, 10 (அப்போதெல்லாம் அந்நோட்டுகள் இருந்தன) நோட்டுகளை பிரித்து வைத்துக் கொள்வார்கள். நான் இன்றும் நடத்துனர்களிடம் பயணக்கட்டணம் ரூபாய் நோட்டில் கொடுத்தால் அவ்விதம் மடக்கியே கொடுப்பேன், அவர்களுக்கு ஒரு சிறு வேலையைக் குறைக்க. நடத்துனருக்கே உரிய ஸ்டைலான ஹேண்ட்பேகை கிடைமட்ட வாகில் உயர்த்தி ஒரு குலுக்கு குலுக்கினால் ஒரு சப்தம் வருமே...(இன்றும் என் காதில் கேட்கிறது!) திருப்பதி உண்டியல் போல கலகலகலவென!
நீண்ட நேரம் பயணித்த பின்பு கிடைக்கும் சீட்டில் அப்பாடா என அமர்ந்தால், சில்லென காற்று முகத்தில் மோதி விளையாடும் ஆனந்தம் இருக்கிறதே...அட அட அடா!
எனக்கும் ஒரு படி மேலே சிலர். யார் என்கிறீர்களா? அவர்கள் உண்மையில், ஒரு படி கீழே! உள்ளே சீட் இருந்தாலும் ஃபுட் போர்ட் அடிக்கும் காலேஜ், டீனேஜ் பாய்ஸ்! அந்தப் பக்கமாய் சாய்ந்து, அடிக்கும் காற்றில் கல்லூரி வாசல் வினீத் எனத் தங்களை நினைத்துக்கொண்டு, அடர்கூந்தல் பின்னோக்கிப் பறக்க, அவர்களும் பறந்து கொண்டிருப்பார்கள். அவ்வளவு இன்புற்று!
ஓடும் பஸ்ஸில் ஏறினால், அது காலேஜ் பாய்ஸ். பஸ்ஸை ஓடவிட்ட பின்பு ஏறினால், அது டீனேஜ் பாய்ஸ்! இளங்கன்று பயம் அறியாது!
பல தோழிகளும் அண்ணன்களும் தினமும் பயணப்படுவதால் ஃப்ரெண்டஸ் ஆகி, தினமும் விஷ் செய்து கொண்டு நிறைய பேசுவோம். என் இரு சக பயணிகளுக்கு என் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முக காணலுக்கு விண்ணப்பிக்கச் சொல்லி, என்னையே ரெஃபரல்லாக போட்டுக்கொள்ளும்படி ஒரு சில சிறு உதவிகளும் செய்தேன்.
"இன்னைக்கு என்னக்கா ஆச்சு?" என்று தினமும் என் நண்டு சிண்டுகள் (அப்போது வளர்ந்து விட்டார்கள்) கேட்பார்கள். தினம் தினம் 29C - ல் பயணித்த ஸ்வாரஸ்யமான கதைகளை இரவு எங்கள் ஃபளாட்ஸ் மொட்டை மாடியில், அவர்களுக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே சொல்லிக் கொண்டிருப்பேன். "என்னையும் நாளைக்கு 29C ல கூட்டிட்டு போறியா?", கேட்டுக்கொண்டே இருப்பான் கார்த்து.
பின்பு ஆறே மாதங்களில் ட்ரெயினிங் பீரியட் முடிந்து, ஆபீஸ் பஸ்ஸே என்னை அழைத்துச் செல்ல வந்துவிடும்...அதே பஸ் ஸ்டாப்பில்.
ஏ.சி. பஸ். முழு அமைதி. அனைவரும் தனித்தனி இருக்கையில். ஹெட் ஃபோன் மாட்டிக்கொண்டு சிலர். போனில் பேசிக்கொண்டு பலர். ஆபீஸ் டாக்குமென்ட்டை பார்த்த வண்ணம் சில மேதாவிகள். பேசக் கூட ஆள் இல்லாததால் நானும் ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டு இளையராஜாவுடன் இணைப்பில் இருப்பேன்!
"ஹேஹஹ..." என்று மாணவர்கள் கத்திக்கொண்டே ஓட்டுனரை உற்சாகப் படுத்தம் சத்தம் கேட்க...எங்கள் பஸ்ஸை ஓவர்டேக் செய்த 29C யை ஏக்கத்துடன் எட்டிப் பார்த்தேன்...
- அலமேலு இராமநாதன்,
கெருகம்பாக்கம்,
சென்னை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!