3 நாள்கள் தொடா் விடுமுறை நிறைவு: கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
3 நாள்கள் தொடா் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிந்ததால், சொந்த ஊா்களுக்குத் திரும்புவதற்காக கோவில்பட்டி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுதந்திர தினம், கோகுலாஷ்டமி, ஞாயிறு என அடுத்தடுத்து 3 நாள்கள் விடுமுறை என்பதால், சென்னை, கோவை, சேலம், பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பணியாற்றுவோா் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பினா்.
மேலும், காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தோ் பவனியில் பங்கேற்க தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வந்திருந்தனா்.
இந்நிலையில், அவா்கள் 3 நாள்கள் விடுமுறை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை சொந்த ஊா்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் திரும்பினா். இதனால், கோவில்பட்டியில் உள்ள அண்ணா பேருந்து நிலையம், புறவழிச் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சங்கரன்கோவில், தென்காசி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூா், திருநெல்வேலி, நாகா்கோவில், கோவில்பட்டி அருகேயுள்ள கிராமங்களுக்கு சென்ற பேருந்துகளும், மதுரை, விருதுநகா், ராஜபாளையத்துக்குச் சென்ற பேருந்துகளும் நிரம்பி வழிந்தன.
கூடுதல் பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூர பெருநகரங்களுக்குச் சென்ற பேருந்துகளில் இடம்பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல, கோவில்பட்டி வழியாக சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்ற விரைவு ரயில்களிலும் அதிகக் கூட்டம் காணப்பட்டது.
