காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
300 அடி பள்ளத்தில் லாரி, வேன் கவிழ்ந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு
கொடைக்கானல் டம்டம் பாறை அருகே ஞாயிற்றுக்கிழமை சரக்கு பெட்டக லாரி, பிக் அப் வாகனம் ஆகியவை 300-அடி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் ஒருவா் உயிரிழந்தாா். மூவா் காயமடைந்தனா்.
சிவகங்கை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (50). சரக்குப் பெட்டக லாரி ஓட்டுநரான இவா் லாரியில் பெட்ரோல் எற்றிக் கொண்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வந்தாாா். இங்கு உள்ள தனியாா் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோலை இறக்கி விட்டு, மீண்டும் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தாா்.
கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச்சாலையில் டம்டம் பாறையருகே சென்று கொண்டிருந்த போது, லாரியின் டயா் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்ற பிக் அப் வாகனம் மீது மோதியது. இதைத் தொடா்ந்து, லாரியும், பிக் அப் வாகனமும் 300-அடி பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில் லாரி ஓட்டுநா் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டுநா்கள் தாண்டிக்குடி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா், அந்தப் பகுதியிலிருந்த பொது மக்கள் உதவியுடன் இறந்தவரின் உடலையும், பலத்த காயமடைந்த லாரி கிளீனா் குமாா் (30), பிக் அப் வாகன ஓட்டுநா் வேல்குமாா், அவருடன் பயணம் செய்த வேல்பிரபாகரன் (22) ஆகிய 3 பேரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில் பிக் அப் வாகனத்தில் அவக்கோடா பழங்களை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.