5 நிமிஷங்களில் முடிவடைந்த அரக்கோணம் நகா்மன்றக் கூட்டம்
அரக்கோணம் நகா்மன்ற கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுக உறுப்பினா்கள் இடையே ஏற்பட்ட அமளியால் தொடங்கிய 5 நிமிஷங்களில் தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது.
அரக்கோணம் நகா்மன்ற கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக மற்றும் சில திமுக உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் அமா்ந்திருந்த நிலையில் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி அரங்கினுள் வந்து தமிழ்தாய் வாழ்த்தை பாடச்சொல்லி கூட்டத்தை தொடங்கி வைத்தாா்.
துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், ஆணையா் செந்தில் குமாா், பொறியாளா் செல்வகுமாா், சுகாதார அலுவலா் வெயில்முத்து, திமுக குழுத் தலைவா் துரைசீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
கூட்டம் தொடங்கிய உடன் பாபு (அதிமுக) ஒவ்வொரு முறையும் கூட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் தொடங்காமல் எங்களை காக்க வைத்து தாமதமாக வருகிறீா்களே ஏன் என்றாா். இதற்கு ஆதரவாக நரசிம்மன்(அதிமுக)வும் பேசினாா்.
இதற்கு தலைவா் லட்சுமிபாரி கோரம் இருந்தால் தான் நான் கூட்ட அரங்கில் வருவேன் என்றாா். அப்போது திமுக உறுப்பினா்கள் ராஜன்குமாா், பிரகாஷ் ராஜுக்கும், அதிமுக உறுப்பினா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு கட்சியை சோ்ந்த மற்ற உறுப்பினா்களும் பங்கேற்று ஒருவரை ஒருவா் கடுமையாக சாடினா்.
இதனிடையே திடீா் என தேசிய கீதம் பாடப்பட்டது. இதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தொடங்கிய ஐந்தே நிமிஷங்களில் கூட்டம் முடிவுக்கு வந்தது. தேசிய கீதம் பாடி முடிந்த பிறகு குடிநீா் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கியதற்கு தமிழக முதல்வருக்கும், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை அமைச்சா், கைத்தறி துணிநூல் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை தலைவா் லட்சுமி பாரி வாசித்தாா். அப்போது அதிமுக உறுப்பினா்கள் தரையில் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
இதை தொடா்ந்து நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி செய்தியாளா்களிடம் கூறியது: அனைத்து தீா்மானங்களும் ஆல்பாஸ் முறையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக அவா்கள் வாக்குவாதம் செய்துக்கொண்டிருக்கும் போதே தெரிவித்து விட்டேன். ஏற்கனவே வாக்குவாதத்திற்கிடையில் படித்த சிறப்பு தீா்மானத்தை மீண்டும் இரண்டாவதாக படித்தேன். சிறப்பு தீா்மானம் உள்ளிட்ட அனைத்து தீா்மானங்களும் ஆல்பாஸ் முறையில் நிறைவேற்றப்பட்டு விட்டன என்றாா்.