6 மாதத்தில் பிரிந்த மனைவி; திருமண ஏற்பாடு செய்த புரோக்கரை கொடூரமாக கொன்ற கணவன்!
திருமணமாகி 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்றதால், பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கணவன் கொலை செய்த சம்பவம் மங்களூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் வாமஞ்சூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த திருமண புரோக்கரான சுலைமான், முஸ்தபா என்பவருக்கு பெண் பார்த்துக் கொடுக்க, 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

தம்பதிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை நடந்ததால் முஸ்தபா வெறுத்து போய் இருந்திருக்கிறார். அது மட்டுமின்றி கோவித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி கடந்த 6 மாதங்களாக திரும்பி வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் மிகவும் மன உளைச்சலுடன் இருந்த முஸ்தபா, இரண்டு நாள்களுக்கு முன் தனக்கு பெண் பார்த்து கொடுத்த புரோக்கர் சுலைமானுக்கு போன் செய்து கடுமையாக திட்டியிருக்கிறார். அவரை சமாதனப்படுத்த தன் மகன்களுடன் மங்களூரில் புறநகர்ப் பகுதியில் இருந்த முஸ்தபாவின் வீட்டிற்கு வந்துள்ளார் சுலைமான்.

இரு மகன்களையும் வெளியில் நிற்க வைத்துவிட்டு வீட்டுற்குள் சென்ற புரோக்கர் சுலைமானிடம் கடும் கோபத்துடன் முஸ்தபா சண்டை போட, அதனால் வெளியே வந்த சுலைமானை துரத்தி வந்து கழுத்தில் குத்தியுள்ளார் முஸ்தபா. சுலைமான் அங்கேயே சரிந்து விழுந்து இறந்தார்.
சத்தம் கேட்டு தடுக்க வந்த சுலைமானின் இரு மகன்களையும் கடுமையாக தாக்கியுள்ளார். பின்பு தகவல் தெரிந்து விரைந்து வந்த மங்களூரு போலீசார், காயமடைந்த இருவரையும மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு முஸ்தபாவை கைது செய்தனர்.
பெண் பார்த்து கொடுத்த புரோக்கரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.