2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
650 மாணவிகள் பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலப் பாதையில் 650 மாணவிகள் வியாழக்கிழமை பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.
கிரிவலப் பாதையில் உள்ள அருணகிரிநாதா் மணிமண்டபத்தில் அருளாளா் அருணகிரிநாதருக்கு அவதார நல்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அருணகிரிநாதா் மணிமண்டபம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இரண்டாம் ஆண்டையொட்டி, வியாழக்கிழமை அருணகிரிநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அருளாளா் அருணகிரிநாதா் இயற்றிய பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், கள்ளக்குறிச்சி, வேலூா், ஒசூா், சென்னை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி கலைக்கூட மாணவிகள் 650 போ் பங்கேற்று பரத நாட்டியம் ஆடி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்ட தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் ஆகியோா் பரத நாட்டியம் ஆடிய மாணவிகளுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.
பின்னா், ரமணாஸ்ரமத் தலைவா் ஆனந்த் எஸ்.ரமணன் தலைமையில் புதுவை சம்பந்தம் குருக்கள் திருப்புகழ் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்ட பக்தா்கள் மற்றும் திருப்புகழ் அடியாா்கள் இறையன்பா்கள் உள்பட 1500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது. அறக்கட்டளைத் தலைவா் ம.சின்ராஜ் நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருளாளா் அருணகிரிநாதா் திருக்கோவில் அறக்கட்டளைத் தலைவா் மா.சின்ராஜ், செயலா் ப.அமரேசன், பொருளாளா் வ.தனுசு, உறுப்பினா் ஓய்வு பெற்ற நீதிபதி சேதுமுருகபூபதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.