உச்சநீதிமன்ற நீதிபதி கே.வினோத் சந்திரன்- கொலீஜியம் பரிந்துரை
BB Tamil 8 Day 89: `நான் என்ன காமெடி பீஸா?'- கடுப்பான சவுந்தர்யா; இருவர் வெளியேற்றமா?
இறுதி டாஸ்க் முடிந்தாலும் TTF ரிசல்ட்டை வெளியிடாமல் சஸ்பென்ஸில் வைத்திருக்கிறார் பிக் பாஸ். சனிக்கிழமை தெரியுமாம். டிவிஸ்ட் இருக்குமாம். வடிவேலு பாணியில் சொன்னால் ‘என்னவா இருக்கும்?’ இதுதான் போட்டியாளர்களின் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கிறது.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 89
‘மாற்றம், முன்னேற்றம், `பச்சை'மணி’ மாதிரி ரயான் திடீரென வேகமாக முன்னேறுவது வீட்டின் சமநிலையைக் கலைத்திருக்கிறது. ‘தான் இருக்க வேண்டிய இடம்’ என்று முத்து, மஞ்சரி, ஜாக் ஆகிய மூவரும் நினைக்கிறார்களா?
“ஜாக்குலினைப் பாரேன்... அவங்க க்ளோஸ் ஆகற பிரெண்டு மாறிட்டே இருக்காங்க. இப்ப மஞ்சரி கூட க்ளோஸா இருக்காங்க.” என்று சவுந்தர்யாவிடம் ரயான் வம்பு பேசிக் கொண்டிருக்க, அந்தப் பக்கத்தில் முத்துவின் டீம் ரயானைப் பற்றி பேசிக் கொண்டிருந்தது. நாம் வீட்டில் உட்கார்ந்து யாரைப் பற்றி வம்பு பேசிக் கொண்டிருக்கிறோமோ, அதே சமயத்தில் அவரும் நம்மைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம் என்பதுதான் இது போன்ற காட்சிகளின் வழியாக கிடைக்கும் நீதி. வம்புவும் புறணியும் சாத்தானின் நுழைவிடங்கள்.
“பாரேன். காலைலயே ஆரம்பிச்சிட்டாங்க” என்று ரயான் எட்டிப் பார்த்தபடி சொல்ல “அவங்க வேற ஏதாவது கூட பேசலாம்” என்று சவுந்தர்யா சொல்ல “ஹலோ.. அவங்க பேசறது காதுல கேக்குது” என்று சிரித்தார் பச்சைத்தலையர் ரயான். ‘பச்சையா தெரியுது’ என்று அவர் அடிக்கடி சொல்வதால் அந்த நிறமே ஒட்டிக் கொண்டது போல.
பந்து டாஸ்க்கில் சொதப்பிய ஜாக்குலின்
போன் டாஸ்க் தொடர்ந்தது. ‘இதுதான் கடைசி கால்’ என்று அறிவித்தார் பிக் பாஸ். அருண் எடுப்பதற்கு சான்ஸ் கிடைத்தது. ‘எதுவா இருந்தாலும் சொல்லு. நான் பண்ணுவேன்’ என்று வாக்குறுதி தந்தார் ஜாக். ‘போனை யார் முதலில் தொட்டது?’ என்கிற சண்டை வழக்கம் போல் வர, ‘நான்தான் தொட்டேன்’ என்று சாதித்தார் அருண். “இல்லை. நான்தான்” என்று மல்லுக்கட்டினார் ரயான். பிக் பாஸ் பேசும் போது ரயானின் குரலும் ஓவர்லாப் ஆகி கேட்டுக் கொண்டே இருந்தது.
அருணுக்கு சொல்லப்பட்ட டாஸ்க் கேட்பதற்கு எளிது போல்தான் தோன்றியது. ஆனால் அருணால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜாக்குலின் இப்படி சொதப்புவார் என்பது எதிர்பார்க்காதது. இரண்டு பெட்டிகளில் தனித்தனியாக உள்ள சிவப்பு மற்றும் பச்சை நிற பந்துகளை ஒரே சமயத்தில் இடம் மாற்றம் செய்ய வேண்டும். ஒரு கட்டத்தில் எந்த நிறப் பந்தை எதில் மாற்றுவது என்பதில் மூளை தடுமாறும் என்பதுதான் இதில் உள்ள சவால். இடது கை சிவப்பு, வலது கை பச்சை என்பதில் மனதில் அழுத்தமாக நினைவுப்படுத்திக் கொண்டால் இந்தக் குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்.
பந்துகளைச் சரியாகப் போட்டுக் கொண்டு வந்த ஜாக், ஒரு கட்டத்தில் ரிவர்ஸ் ஆர்டரில் போட்டு பந்துகளை அதே இடத்தில் வைத்துக் கொண்டிருந்தார். தான் சரியாக செய்து முடித்து விட்டோம் என்கிற மகிழ்ச்சியில் ஜாக் கூவ, பக்கத்தில் இருந்த அருணிற்கு கூட அந்தத் தவறு புரியவில்லை. வீடியோவில் பார்த்த ரயான் சரியாக சொல்லி விட்டார். முத்துவும் அதைக் கவனித்தார்.
தாங்கள் செய்த பிழை அறியாமல் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை நிறுத்தி பிக் பாஸ் விஷயத்தை விளக்க ஜாக் முகத்தில் திகைப்பு. ‘இதுவும் போச்சா’ என்று உறைந்து நின்றார் அருண். ‘உங்களுக்கு மைனஸ் 1 மதிப்பெண்’ என்று சொல்லி மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தார் பிக் பாஸ். “யோவ்.. என்னய்யா சொல்ற.. இப்படில்லாம் முன்னாடி சொல்லலியே?” என்கிற அளவிற்கு அருண் ஆட்சேபம் தெரிவிக்க “சும்மா.. லுலுவாய்க்கு.. அப்பத்தானே நீங்க சந்தோஷம் அடைவீங்க.. இரு கோடுகள் தத்துவம் மூலமா உங்களை கூல் பண்ண முயற்சி பண்ணேன்’ என்கிற மாதிரி பிக் பாஸின் விளையாட்டு இருந்தது. ‘பிரபா ஒயின்ஸ்’ காமெடி மாதிரி “இப்ப சிரிங்க பார்க்கலாம் அருண்.. ம்… இப்ப எப்படி இருக்கு’ என்கிற மாதிரி அருணை கிச்சுமுச்சு மூட்டி மகிழ்ந்தார் பிக் பாஸ். அருண் தோல்விக்காக ஜாக் கண்கலங்கினார்.
சவுந்தர்யா + ராணவ் = டாம் & ஜொ்ரி
சவுந்தர்யாவின் ரசிகர் பலம் மற்றும் அலட்சியமான ரியாக்ஷன்ஸ் காரணமாக அவரிடம் யாரும் பெரிதாக வைத்துக் கொள்வதில்லை போல. ஆனால் சவுந்தர்யாவிடம் நேருக்கு நேராக மல்லுக்கட்டும் திராணி ராணவ்விற்கு மட்டுமே இருக்கிறது. இரண்டுமே குழப்ப கேஸ்கள் என்பதால் ஜாடிக்கேற்ற மூடி மாதிரி நன்றாக ஒத்துப் போகிறது. இருவருக்கும் இடையே ஒரு பஞ்சாயத்து.
இதுதான் பஞ்சாயத்து விவரம்: முத்து மைக்கை சரியாக மாட்டாததால், அவரிடம் கடைசியாக பேசிய ராணவ் ‘டாஸ்க்’ செய்ய வேண்டும். ஹவுஸ் இன்சார்ஜ்-ஆக இருக்கும் சவுந்தர்யா, டான்ஸ் ஆடக் கற்றுத் தந்து ‘மைக்கை சரியா மாட்டுங்க பிரெண்ட்ஸ்’ என்று மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று ராணவிற்கு டாஸ்க் தர, அதை அரைகுறையாக செய்தார் ராணவ். “சரியா செய்யச் சொல்லுங்க. செய்யற வரைக்கும் விடாதீங்க.. என்ன நெனச்சிட்டிருக்கான்..’ என்றெல்லாம் முத்து இடையில் புகுந்து இம்சித்ததால் கோபம் அடைந்த ராணவ் ‘செய்ய முடியாது போங்கடா” என்று விலகிச் சென்றார். “முத்து சொல்றத நீ கேக்காத. பேச்சு. உனக்கும் எனக்கும் நடுவுலதான்” என்று சவுந்தர்யாவிடமும் கோபப்பட்டார்.
அவ்வளவுதான். சவுண்டிற்குள் இருக்கும் சந்திரமுகி உக்கிரமாக விழித்துக் கொள்ள “முத்து சொல்றத ஒண்ணும் நான் கேட்கலை. ஏன் சிரிக்கற... டேய்... என்னைப் பார்ததா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா. உன்னைல்லாம் வெச்சுக்கிட்டு வாழ்க்கைல ரொம்ப கஷ்டம்டா ” என்றெல்லாம் கத்தினார் சவுந்தர்யா. “சில நேரங்கள்ல இன்னசன்ட்டா இருக்கான். நடிக்கறானா?” என்று முத்துவையே புலம்ப வைத்து விட்டார் ராணவ். “உன் கிட்ட எனக்கு பேச்சு இல்ல. சவுந்தர்யா கிட்டதான் என் டீல்” என்று ராணவ் முறைப்பாக பேச “இந்த நொடில இருந்து உனக்கும் எனக்கும் பேச்சில்லை” என்று டென்ஷன் ஆனார் முத்து.
ஆனால் முத்துவைப் பகைத்துக்கொண்டு ராணவ்வால் காலம் தள்ள முடியுமா? எனவே அவரே சென்று முத்துவிடம் பேசி “unethical சொன்னல்ல.. அதுதான் எனக்கு ஹிட் ஆகிட்டே இருக்கு” என்று சமாதானம் பேச “இப்ப வேணாம் விட்டுடு” என்று மறுத்தாலும் “இப்ப என்ன.. நீ நோ்மையா விளையாண்டே. Unethical-ஆ ஆடலை.. அவ்வளவுதானே.. இப்ப மகிழ்ச்சியா.. ரைட்டு விடு” என்று ஏதோ தானத்தை தூக்கிப் போடுவது போல மன்னிப்பை தூக்கிப் போட்டார் முத்து.
ஸ்கோர் போர்டில் தங்களின் இடங்கள் பாய் விரித்துப் படுக்கும் சௌகரிய வசதி போல காலியாக இருப்பதைப் பார்த்து ‘அய்யோ.. மத்தவங்க இடங்கள்லாம் ததும்பி நிக்குதே.. நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம்.. சர்வேஸ்வரா” என்கிற மாதிரி அருணும் பவித்ராவும் புலம்பினார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல காமெடிக் காட்சி
வாஸ்து விவகாரம் கிச்சன் ஏரியாவைத் தாண்டி படுக்கையறையிலும் நுழைந்து விட்டதுபோல. ஒரு குறிப்பிட்ட படுக்கையில் படுப்பவர்கள் உத்தரவாதமாக எலிமினேட் ஆகிறார்கள் என்கிற மூடநம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்தப் படுக்கையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தள்ளித்தான் புழங்குகிறார்கள். இந்த விஷயம் சவுந்தர்யாவிற்குத் தெரியாதுபோல. எனவே அவரைக்கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லாமல் ‘உக்காரேன்... பேசணும்” என்று அழைத்துப் பிறகு சொல்ல அவர் ‘அய்யய்யோ..’ என்று அலறியடித்துக் கொண்டு உருண்டு புரண்டு தவழ்ந்து இன்னொரு படுக்கைக்குச் சென்றார். அதையும் கலாய்த்து ‘ராணவ்வோட பெட்ல உக்காந்துக்கோ’ என்று சலுகை காட்ட “வேணாம். எப்படியும் அவன் இந்த வாரம் போய்டுவான்” என்று சவுண்டு சொல்ல, ‘அடப்பாதகத்தி!’ என்பது மாதிரி அதிர்ச்சியுடன் பார்த்தார் ராணவ். நீண்ட நாளைக்குப் பிறகு பிக் பாஸ் வீட்டில் ஓர் இயல்பான காமெடிக் காட்சி.
டிக்கெட் டூ ஃபினாலேவின் கடைசி டாஸ்க்கை அறிவித்த பிக் பாஸ் கூடவே அதிர்ச்சி வைத்தியமும் தந்தார். ஜீரோ மதிப்பெண்கள் பெற்றிருக்கும் பவித்ரா, அருண், ஜாக் மற்றும் விஷால் ஆகிய நால்வரும் நடைபெறவிருக்கும் இந்த கடைசி டாஸ்க்கில் பங்கு பெற முடியாது. இதைக் கேட்டு அருண் எக்ஸ்ட்ரா அதிர்ச்சி அடைய, பவித்ரா அழ ஆரம்பிக்க, விஷால் ‘என்னடா இது’ என்று வயிற்றுவலிக்காரன் மாதிரி உலவ, இடிந்து போய் உட்கார்ந்திருந்தார் ஜாக்.
`நேரம் நல்ல நேரம்’ என்கிற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்தது அந்த டாஸ்க். கடிகார அமைப்பில் உள்ள வட்டத்திற்குள் ஏறி நின்று அனைத்துப் பந்துகளையும் பஸ்ஸர் அடிப்பதற்குள் குழியில் தள்ள வேண்டும். இரண்டிரண்டு பேராக செய்ய வேண்டிய டாஸ்க் இது. முதலில் ராணவ்வும் தீபக்கும் செய்தார்கள். ராணவ் விரைவில் முடிப்பது போன்ற நிலைமை ஏற்பட அவரை அரைமனதாக மற்றவர்கள் ஆதரித்தார்கள். தீபக் வெல்ல வேண்டும் என்றுதான் பெரும்பாலோனோரின் மனதில் இருந்தது. எண்ணியபடியே தீபக் வென்றார். அடுத்தடுத்த வரிசைகளில் முத்து, ரயான் ஆகியோர் வென்றார்கள்.
சவுந்தர்யா டாஸ்க் செய்ய ஆரம்பித்தால் கூட அதில் காமெடி நுழைந்து விடுகிறது. தத்தக்கா பித்தக்கா என்று ஆடினாலும் பெரும்பாலான பந்துகளை தள்ளிய அவர் ‘எருமமாடு வருதா பாரேன்’ என்று எரிச்சலுடன் முனகியது காமெடி.
ரயானும் அருணும் இணைந்து இப்போதெல்லாம் தீவிர ஆலோசனைகளை நிகழ்த்துகிறார்கள். “முத்து மஞ்சரி, ஜாக்லாம் எக்ஸ்டீரீம் பிரெய்ன். வெளில இருக்கறவங்களுக்கு டவுட் வராத மாதிரி சில விஷயங்களைப் பண்றாங்க. தப்பை தட்டிக் கேக்கறா மாதிரி பண்றாங்க” என்று ரயான் சொல்ல, “இதை நான் 8 வாரத்துலயே கண்டுபிடிச்சிட்டேன்’ என்று பெருமையடித்தார் அருண். (என்ன இருந்தாலும் நீ வைல்ட் கார்டுதான்!)
ரிசல்டை சொல்லாமல் சஸ்பென்ஸ் வைத்த பிக் பாஸ்
ஆட்டம் முடிந்து அனைவரும் ரிசல்ட்டை எதிர்நோக்கி ஆவலாக காத்துக் கொண்டிருக்க “சனிக்கிழமைதான் தெரியும். அதுல டிவிஸ்ட்டும் இருக்கும்” என்று சஸ்பென்ஸ் வைத்தார் பிக் பாஸ். விஜய்சேதுபதி கையால் டிக்கெட் கொடுக்கும் பிளான் போலிருக்கிறது. “கிளைமாக்ஸ் சீன்ல கரண்ட் கட் ஆன மாதிரி ஆயிடுச்சே” என்று பலரும் ‘என்னவா இருக்கும்?’ என்று விதம் விதமாக யோசித்து பிறகு நொந்து போய் “நாம என்ன யோசிச்சாலும் பிக் பாஸ் பிளான் வேற மாதிரி இருக்கும். பார்ப்போம்” என்று விலகிச் சென்றார்கள்.
“ரயான் டிக்கெட் வாங்கினாலும் பெட்டி எடுத்துட்டு போற பிளான்ல இருக்கான்” என்கிற ரகசியத்தை ஜாக்கிடம் அவிழ்த்தார் மஞ்சரி. “அப்புறம் எதுக்கு விளையாடணும்?” என்பது அவரது ஆதங்கம். ரயானும் அருணும் மீண்டும் தீவிர ஆலோசனையில் இறங்கி “பிக் பாஸ் ஆட்டம் என்பது என்ன?.. டாஸ்க் செய்வதா.. மற்றவர்களின் ஸ்ட்ராட்டஜியை அறிவதா. மற்றவர்களின் சிந்தனைகளை மோப்பம் பிடிப்பதா?’ என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். (அதையும் தாண்டி புனிதமானது - பி.பா மைண்ட் வாய்ஸ்!).
ரயானைப் பற்றிய அனத்தலை ஜாக் நிறுத்த முடியாத சூழலில் ஒரு வேட்டி விளம்பரம். காமெடியாக நிகழ்த்திய அருணும் முத்துவும் பரிசு பெற்றார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’ காமெடி மாதிரி விஷாலும் ராணவ்வும் செய்த காமெடி விளம்பரமும் சுவாரசியம்.
ராணவ் என்பவர் யார்… மும்பையில் என்ன செய்து கொண்டிருந்தார்?
சேது திரைப்படத்தில் ‘சீயான்’ என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொள்வது போல ‘ராணவ்வின் உண்மையான காரெக்ட்டர் என்ன?’ என்கிற விஷயம் யாருக்கும் புரியவில்லை. எனவே அது தொடர்பான ஆய்வு நடந்து கொண்டிருந்தது. ‘விளங்க முடியாத கவிதையாக’ தன்னுடைய திருச்சேவையை பிக் பாஸ் வீட்டில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் ராணவ். வெளியே வந்து நேர்காணல்களில் பேசும் போது அவரது நிறம் அம்பலமாகி விடும். வீட்டிற்குள் தெரிவதுதான் அவருடைய உண்மையான காரெக்டர் என்று தோன்றுகிறது.
இன்று பஞ்சாயத்து நாள். TTF பெற்றவர் யார் என்பது அதிகாரபூர்வமாகத் தெரிய வரும். அது தவிர, இந்த வாரம் டபுள் எவிக்ஷனாமே?!