50 போட்டிகளில் 36 க்ளீன் ஷீட்ஸ்..! பிரமிக்க வைக்கும் ஆர்ஜென்டீன கோல்கீப்பர்!
KKR: கோப்பையை வென்றும் கேப்டனை விட்டுக் கொடுத்த அணி - அதே கோர் டீம்; புது கேப்டன் - Team Analysis
ஐபிஎல் 18-வது சீசன் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு முறையும் மெகா ஏலத்தின்போது மற்ற அணிகளை விடவும் சற்று சோகத்தில் இருப்பது அந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற அணிதான். ஏனெனில் மற்ற அணிகளெல்லாம், அடுத்த சீசனில் கோப்பையை வெல்வதற்கான அணியைக் கட்டமைக்க சரியான வீரர்களைத் தேடிக்கொண்டிருக்கும் நேரத்தில், சாம்பியன் பட்டம் வென்ற அணி மட்டும் தங்களின் சாம்பியன் வீரர்கள் வேறு அணிகளுக்குச் செல்வதை கண்ணெதிரே பார்த்துக்கொண்டிருப்பர்.

அதில், அணியின் கோர் பிளேயர்ஸ்களை மட்டும் கோடிகளுக்கு அப்பாற்பட்டு அணியில் தக்கவைப்பதென்பது ஒரு கலை.
அந்த வகையில், கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் இல்லை என்றாலும் பரவாயில்லை, நீண்ட காலத்துக்கு அணியின் வெற்றிக்கு உதவக்கூடிய வீரர்களும் (ஹர்ஷித் ராணா, ரின்கு சிங், வருண் சக்ரவர்த்தி, ரமன்தீப் சிங்), அதேசமயம் அணிக்கு பல ஆண்டுகளாக வெற்றிகளைத் தேடித்தந்த லாயல் சீனியர்களும் (சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல்) போதும் என்று கோர் டீமை தக்கவைத்தது நடப்பு சாம்பியன் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (KKR).
பேட்ஸ்மேன்கள்
அஜின்க்யா ரஹானே (C)
ரின்கு சிங்
குயின்டன் டிகாக் (WK)
ரகமதுல்லாஹ் குர்பாஸ் (WK)
ரோவ்மன் பொவல்
அங்கிரிஷ் ரகுவன்ஷி
மனீஷ் பாண்டே
லவ்னித் சிசோடியா (WK)
ஆல்ரவுண்டர்ஸ்
வெங்கடேஷ் ஐயர்
மொயின் அலி
ஆண்ட்ரே ரஸல்
ரமன்தீப் சிங்
அனுகுல் ராய்
பவுலர்ஸ்
ஹர்ஷித் ராணா
வைபவ் அரோரா
ஆன்ரிச் நோர்க்கிய
ஸ்பென்சர் ஜான்சன்
சேட்டன் சக்காரியா
மயன்க் மார்கண்டே
வருண் சக்ரவர்த்தி
சுனில் நரைன்

அணியைப் பார்க்கும்போது பேட்டிங் லைன் அப் ஓகே, பவுலிங் யூனிட் ஓகே, பட் ஆல்ரவுண்டர்ஸ் வெறும் 5 பேர்தானா என்று தோன்றலாம்... ஆனா அந்த 5 பேர்ல அனுகுல் ராய் தவிர மற்ற நான்கு பெரும் மேட்ச் டர்ன் பிளேயர்ஸ் என்பதை மறந்துவிடக்கூடாது. சரி நேரா டீம் எப்படி இருக்குனு பார்க்கலாம். முதலில் அணியின் தலைவனிடமிருந்தே செல்வோம்...
பொதுவாகவே, கோப்பையை வென்று கொடுத்த கேப்டனை ஒரு அணி ஏலத்தில் விடுமா என்பது சந்தேகம்தான். இருப்பினும், கொல்கத்தா அதைச் செய்தது. திரை மறைவில் என்னவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால், அந்த கேப்டன் இடத்தை சரியான நபரைக் கொண்டு கொல்கத்தா நிரப்பியிருக்கிறது என்றே கூறலாம். டெஸ்ட், ஒருநாள் போட்டிகளைப் போல ஐபிஎல் போட்டிகளிலும் ரஹானே சற்று நிதானமான ஆட்டக்காரர்தான். நீண்ட நேரம் காலத்தில் நின்று ஆடுவது தான் அவர் ரோல். ஆனால், அது 2022 வரையில்தான். 2023-ல் சென்னை அணியில் இணைந்த பிறகு அவரின் அணுகுமுறையே மாறிவிட்டது.

அந்த சீசனில் மட்டும் 172 ஸ்ட்ரைக் ரேட்டில் 326 ரன்கள் குவித்து சென்னை கோப்பை வெல்ல முக்கியப் பங்காற்றினார். இருப்பினும், கடந்த சீசனில் ரஹானேவிடம் அந்த அதிரடி அணுகுமுறை இல்லை. சற்று குறைந்துவிட்டதுதான். பின்னர் அதிலிருந்து வெளிவந்து, கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 164 ஸ்ட்ரைக் ரேட்டில் 469 ரன்கள் குவித்து தொடர்நாயகன் விருதுவென்றார். இத்தனைக்கும், அந்தத் தொடரில் இவர் விளையாடிய மும்பை அணியை ஸ்ரேயஸ் ஐயர்தான் வழிநடத்தினார். ஆனாலும், இப்போதைக்கு கொல்கத்தா அணிக்கு தேவை ஒரு சரியான கேப்டன்தான்.
ஐபிஎல்லில் ரஹானேவின் கேப்டன்சி (25 போட்டிகளில் 9-ல் வெற்றி, 16-ல் தோல்வி) சொல்லிக்கொள்ளுமளவுக்கு இல்லை என்றாலுமே, கோலி இல்லாத சமயத்திலெல்லாம் இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய அனுபவம் இவருக்கு இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கப்பா மைதானத்தில் ரஹானேவின் தலைமையில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் போட்டி வென்றதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். கடந்த ஆண்டு இரானி கோப்பையை ரஹானே தலைமையில்தான் மும்பை வென்றது. அந்தப் போட்டியில் ரஹானே தலைமையில் ஸ்ரேயஸ் விளையாடியிருந்தார்.

சரி இந்த கணக்குளையெல்லாம் தள்ளிவிட்டு எப்படிப் பார்த்தாலும், ரூ. 1.5 கோடிக்கு அனுபவம் வாய்ந்த ரஹானே கேப்டனாக கிடைத்தது கொல்கத்தாவுக்கு ஜாக்பாட்தான். அதை ரஹானே தனது தலைமைத்துவ பண்புகளால் களத்தில் நிரூபிக்க கைமேல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நிச்சயம், இந்த சீசனோடோ அல்லது அடுத்த சீசனோடோ ரஹானே கழற்றிவிடப்படலாம். ஆனால், அதற்குள் தங்கள் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயருக்கு இப்போதைக்கு பெரிதாக கேப்டன்சி அழுத்தம் பாதிக்காமல் இருக்கும் வண்ணம், ரஹானேவின் அனுபவங்களை வைத்து அவரை கேப்டன்சி மெட்டீரியலாக தயார் செய்வதே கொல்கத்தாவின் தொலைநோக்குப் பார்வையாக இருக்கும்.

இல்லையெனில், ரூ. 23.75 கோடி கொடுத்து வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா ஏலத்தில் எடுத்திருக்குமா என்று நினைத்துப்பார்க்க வேண்டும். அதோடு, கேப்டன்சிக்கு தயாராக இருக்கிறேன் என்று அவரே கூறியபோது, இப்போதே சுமை வேண்டாம் என துணைக் கேப்டனாக அவரை கொல்கத்தா நியமித்தது. மொத்தத்தில், ரஹானேவின் கேப்டன்சியோடு அவரின் பேட்டிலிருந்து ரன்களும் வந்தால் கொல்கத்தா டபுள் ஹாப்பிதான்.
கொல்கத்தாவின் வரலாற்றை சற்று திருப்பிப் பார்த்தால், சுனில் நரைன் எப்போதெல்லாம் கொல்கத்தா அணியில் ஓப்பனிங்கில் இறக்கப்பட்டாரோ, அந்த சீசன்களிலெல்லாம் பிளேஆஃப் சுற்றுக்கு அந்த அணி முன்னேறியிருக்கிறது. 2017-ல் முதல்முறையாக சுனில் நரனை குஜராத் லையன்ஸுக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங்கில் இறக்கினார் அப்போதைய கேப்டன் கம்பீர். ஒப்பனராக தனது முதல் போட்டியிலேயே களத்தில் நின்ற 15 நிமிடங்களில் 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அசரவைத்தார் நரைன்.

அங்கு தொடங்கியது நரைனின் ஓப்பனிங் அவதாரம். அந்த சீசனில் 172 ஸ்ட்ரைக் ரேட்டில் 224 ரன்கள் குவித்தார். 2018-ல், 189 ஸ்ட்ரைக் ரேட்டில் 357 ரன்கள் குவித்தார். அதன்பிறகு, ஐந்தாண்டுகளாக ஓப்பனிங்கில் நரைனை இறக்கவில்லை. பிறகு திடீரென, கடந்த சீசனில் அணியின் ஆலோசகராக கம்பீர் நுழைந்ததும் மீண்டும் ஓப்பனிங் அவதாரமெடுத்தார் நரைன். இந்த முறை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு சதம் உட்பட அதிரடியாக 488 ரன்கள் குவித்தார். பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சில் 6 எக்கனாமியில் 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தி தொடர்நாயகன் விருதும் வென்றார். இறுதியில் கொல்கத்தா கோப்பையும் வென்றது.
அவருக்கு உறுதுணையாக ஓப்பனிங்கில் பில்ப் சால்ட் தன் பங்குக்கு அதிரடியாக 435 ரன்கள் குவித்தார். ஆனால், மெகா ஏலத்தில் பில்ப் சால்டை பெங்களூரு வாங்கிவிட்டது. இந்த சீசனில் நரைனுடன் ஓப்பனிங்கில் கைகோர்க்கப்போவது யார்... ஆப்ஷனில் குயின்டன் டி காக், ரகமதுல்லாஹ் குர்பாஸ், ரஹானே ஆகியோர் இருக்கின்றனர். இதில் பெரிதாக குழப்பம் இருக்கப்போவதில்லை. நரைனுடன் - குயின்டன் டி காக் இணைந்தால் நிச்சயம் அது இருமுனைக் கத்திதான்.

குயின்டன் டி காக் கடைசியாக ஆடிய மும்பை, லக்னோ ஆகிய அணிகளில் `ஒரே மோட் அது அதிரடி மோட்' என்றுதான் ஆடிக்கொண்டிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 140 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இவர்தான் இருக்கிறார். எனவே, நரைன் - குயின்டன் டி காக் ஓப்பனிங் எனில் குர்பாஸ் பிளெயிங் லெவனில் தேர்வாவது கடினம்.

ஒன்டவுனில் ரஹானே இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை, குயின்டன் டி காக் பிளெயிங் லெவனில் இடம்பெறாத பட்சத்தில் விக்கெட் கீப்பராக குர்பாஸ் தேர்வாகி ஓப்பனிங்கில் இறங்கலாம். இருப்பினும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதைப்போல ரஹானே - குயின்டன் டி காக் ஓப்பனிங்கில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.
இந்த சீசனில் வலிமையான மிடில் ஆர்டர் எந்த அணியில் இருக்கிறது என்று வரிசைப்படுத்தினால், கண்ணை மூடிக்கொண்டு கொல்கத்தாவின் பெயரை முதலிடத்தில் எழுதிவிடலாம். நம்பர் 4, 5, 6, 7 ஆகிய நான்கு இடங்களுக்கு வெங்கடேஷ் அய்யர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங், மொயின் அலி, ரோவ்மன் பொவல் என ஸ்பின் அண்ட் பேஸ் எல்லாவற்றையும் ஒரு கை பார்க்க ஹிட்டர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.

பேக்கப்பில், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனீஷ் பாண்டே ஆகியோரும் சாய்ஸில் இருக்கின்றனர். இதில், எப்படிப் பார்த்தாலும் வெங்கடேஷ் அய்யர், ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸல், ரமன்தீப் சிங் ஆகியோரே மிடில் ஆர்டரில் இறங்க அதிக வாய்ப்பிருக்கிறது. இவர்களில், ரஸலை ஹார்ட் ஹிட்டர் என்று மட்டும் சுருக்கிவிட முடியாது.

கடந்த சீசனில், 31 ஆவரேஜில் 222 ரன்கள் அடித்தது மட்டுமல்லாமல், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். எனவே, இந்த சீசனில் எதிரணியினருக்கு தொல்லை தரக்கூடிய மிடில் ஆர்டராக கொல்கத்தா மிடில் ஆர்டர் இருக்கும் என்பதில் எந்த சேந்தேகமுமில்லை. இதுக்குமேல இவங்க மிடில் ஆர்டர் பத்தி நாம பேச வேண்டாம், களத்துல அவங்க பேட் பேசட்டும்.
2012 முதல் இப்போது வரை தொடர்ச்சியாக 13 வருடங்களாக கொல்கத்தா அணியில் இருக்கும் ஒரே வீரர் சுனில் நரைன்தான். ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் டாப் 10 பட்டியலில், நரைன் 177 போட்டிகளில் 180 விக்கெட்டுகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். மேலும், இந்த டாப் 10 லிஸ்டில் எக்கனாமி 7-க்கும் குறைவாக இருக்கும் ஒரே பவுலர் நரைன் மட்டும்தான். கடந்த சீசனில் கூட 6 எக்கனாமியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

13 வருடங்களாக ஐபிஎல் ஆடும் இவரின் பந்தை இன்றும்கூட பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியவில்லை. இவரைத்தொடர்ந்து, மற்றொரு மிஸ்ட்ரி ஸ்பின்னராக வருண் சக்ரவர்த்தி உயர்ந்திருக்கிறார். 2019-ல் பஞ்சாப் அணியில் அறிமுகமாகி தனது முதல் ஓவரில் 25 ரன்களைக் கொடுத்து, ஐபிஎல் வரலாற்றில் அறிமுக வீரராக முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையுடன் பயணத்தைக் தொடங்கிய வருண், இன்று பேட்ஸ்மேன்களுக்கு சோதனை தரும் சக்ரவர்த்தியாக உயர்ந்திருக்கிறார்.

2020 முதல் கொல்கத்தா அணியில் ஆடிவரும் வருண் சக்ரவர்த்தி, மொத்தமாக 70 போட்டிகளில் 7.5 எக்கனாமியுடன் 83 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியிலும் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி அதே ஃபார்மில் ஐபிஎல்லுக்கு வந்திருக்கிறார். நிச்சயம் இந்த சீசனில் பேஸ்ட் ஸ்பின் கூட்டணியாக நரைன் - வருண் சக்ரவர்த்தி கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. இவர்களுக்கு சப்போர்ட் செய்ய மயன்க் மார்கண்டேவும் பேக்கப்பில் இருக்கிறார்.
கடந்த சீசனில் லீக் போட்டி வரை சைலண்டாக இருந்த ஸ்டார்க், பிளே ஆஃப் வந்ததும் வைலண்டானதை அனைவருமே பார்த்தோம். அதுவரையில், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகியோர் பேஸ் பவுலிங்கை கவனித்துக் கொண்டனர். ரஸல் தேவையான நேரத்தில் விக்கெட் எடுத்துக் கொடுத்து பேஸ் பவுலிங்கில் மிகப்பெரிய உறுதுணையாக இருந்தார்.

இந்த முறையும், இதே கூட்டணிதான் நீடிக்கிறது. ஆனால், ஸ்டார்க் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய சுமை ஆன்ரிச் நோர்க்கியா மீதும், ஸ்பென்சர் ஜான்சன் மீதும் வந்திருக்கிறது. ஏனெனில், ஹர்ஷித் ராணாவின் பலமே அதிவேகமாக பந்துவீசுவதும், பவுன்சர் போடுவதும்தான். அதற்கேற்றாற்போல் இன்னொரு வேகப்பந்துவீச்சாளர் பந்துவீச்சில் நிறைய வேரியேஷன்களை வெளிப்படுத்துபவராக இருக்க வேண்டும். அந்த வேலையைத்தான் ஸ்டார்க் செய்தார்.

ஆனால், நோர்க்கியாவிடமும், ஸ்பென்சர் ஜான்சனிடமும் இது குறைவு. எனவே இந்தக் குறையை கொல்கத்தா அணி சரிசெய்துவிட்டால், ஸ்பின் யூனிட்டை போலவே பேஸ் யூனிட்டையும் வலிமையாக கட்டமைத்துவிடலாம். மேலும், பேஸ் பவுலிங்கில் சேட்டன் சக்காரியாவும் பேக்கப்பில் இருக்கிறார். இதுபோக, அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ இருக்கிறார். அவரின் தாக்கம் நிச்சயம் பேஸ் பவுலிங்கில் வெளிப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
உத்தேச பிளெயிங் 11:
சுனில் நரைன் (OP)
குயின்டன் டிகாக் / ரகமதுல்லாஹ் குர்பாஸ் (OP)
ரஹானே
வெங்கடேஷ் ஐயர்
ரின்கு சிங்
ஆண்ட்ரே ரஸல் (OP)
ரமன்தீப் சிங்
ஹர்ஷித் ராணா
வைபவ் அரோரா
வருண் சக்கரவர்த்தி
நோர்க்கியா / ஸ்பென்சர் ஜான்சன் (OP)
அபார்ட் ஃப்ரம் அனாலிசிஸ், நடப்பு சாம்பியனாகக் கொல்கத்தா களத்தில் ஜொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
