Rajinikanth: ``அங்கதான் கடைசி பெஞ்ச்சுக்கு போனேன்" - பள்ளி ரீ யூனியன் குதூகலமாக வாழ்த்திய ரஜினி
பெங்களூருவில் என்.ஆர். காலனி பகுதியில் பிரபலமான ஏ.பி.எஸ். என்கிற ஆச்சார்யா பாடசாலா கல்விக் குழுமத்தில் பழைய மாணவர்கள் சந்திப்பு வரும் 26ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி பள்ளி நிர்வாகம் பழைய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
'ஆச்சார்யா பாடசாலா' குழுமத்தின் நடுநிலைப் பள்ளி, மற்றும் இதே நிர்வாகத்தின் கல்லூரியிலும் படித்தவர் நடிகர் ரஜினிகாந்த். எனவே அவருக்கும் அழைப்பு விடுத்து பள்ளி நிர்வாகம் கடிதம் எழுத, 'வெளிநாட்டில் ஷூட்டிங் இருப்பதால் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை என்றும் இன்னொரு முறை நிச்சயம் வருவதாகவும் கூறியிருக்கும் ரஜினிகாந்த் விழாவுக்குத் தன் வாழ்த்துகளை சொல்லி வீடியோ அனுப்பியிருக்கிறார்.
வீடியோவில் பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து கன்னடத்தில் பேசியிருக்கும் ரஜினி,
''பிரைமரி ஸ்கூல் வரை ஒரு கவர்மென்ட் ஸ்கூல்ல கன்னட மீடியத்துல படிச்சேன். அப்ப பிரைட் ஸ்டூடன்ட். தொண்ணூறு சதவிகிதத்துக்கு மேல் எடுத்திட்டிருந்தேன். ஆனா மிடில் ஸ்கூலுக்கு 'ஆச்சார்யா' வந்தப்ப இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்தாங்க. விளைவு ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடன்ட்டா இருந்தவன் கடைசி பெஞ்ச் ஸ்டூடன்ட்டாகிட்டேன்.
அதேநேரம் இந்தப் பள்ளிக்கூடம் தான் என்னுடைய நடிப்புக்கு ரூட் போட்டுச்சுன்னு சொல்லலாம். இங்க படிச்சப்ப நாடகம் நடிச்சேன். அந்த நடிப்புக்கு சிறந்த நடிகர் விருது கிடைச்சது. நடிப்புக்குன்னு நான் வாங்கிய முதல் விருது அறுபதுகளில் இங்க வாங்கிய இந்த சிறந்த நடிகர் விருது தான். அங்கிருந்து தொடங்கிய நடிப்புப் பயணம், இப்ப வரை மக்களை மகிழ்விச்சிட்டிருக்கிற ஜர்னி போயிட்டிருக்கு.
ட்ராமா போலவே விளையாட்டுக்கும் முக்கியத்துவம் தர்ற பள்ளிக்கூடமா இருந்துச்சு ஏ.பி.எஸ். அந்த கிரவுண்ட்ல விளையாடியதெல்லாம் இப்பவும் நினைவுல இருக்கு. இந்தப் பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப சில பாடங்களில் ஃபெயிலாகிட்டேன். பிறகு எனக்குத் தனியே சொல்லிக்கொடுத்து பாஸ் பண்ண வச்சாங்க என் ஆசிரியர்கள்.
ஸ்கூல் முடிச்சதும் இதே ஏ.பி.எஸ். காலேஜ்ல பி.யூ.சி.யும் சேர்ந்தேன். ஆனா சில காரணங்களால் காலேஜை முழுசா முடிக்க முடியாம போயிடுச்சு' எனப் பேசியிருக்கிறார்.
ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கும் ஆச்சார்யா பாடசாலா குழுமத்தின் தலைவர் விஷ்ணு பாரத், ரஜினியிடமிருந்து வாழ்த்தைப் பெற்றுத் தந்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமாறன் என்பவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இந்தத் திருமாறன் திருநெல்வேலி பகுதியில் வெங்கடாம் பட்டி என்கிற கிராமத்திலிருந்தபடி, சுமார் நாற்பது ஆண்டுகளாக ரஜினிகாந்த் ரத்ததானக் கழகம் நடத்தி வருகிறவர்.
அவரிடம் பேசினோம்.
''அடிப்படையில் நான் ரஜினி சார் ரசிகன். ஆனா ரசிகர் மன்றம் போல செயல்படாம ரத்ததானக் கழகத்தைத் தொடங்கி அதை மட்டுமே ஒரே ஃபோகஸா பண்ணிட்டிருக்கேன். இதுக்குப் பின்னாடி என் நண்பர்கள் சிலரும் ரஜினி சார் ரசிகர்கள் பலரும் இருக்காங்க. இதுவரை சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றி இருக்கோம்.
ரத்த தானக் கழகப் பணிகள் தொடர்பா தலைவரை நான் ஏற்கெனவே சந்திச்சிருக்கேன். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தொடர்ந்து ரத்த தானம் பண்றவங்களை என்கரேஜ் செய்ற விதமா கையெழுத்துப் போட்டு சர்டிபிகேட் தருவார் தலைவர்.
காவிரி நீர் விவகாரம் தமிழ்நாட்டுல பிரச்னை ஆகிறப்பெல்லாம் எல்லாரும் முதல்ல குறி வைக்கிறது தலைவரைத்தான். அதனால் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே அவருடைய பூர்வீகம், அவருடைய கூடும்பம், அவர் வசிச்ச இடங்களைத் தேடி பயணம் செஞ்சிருக்கேன் நான். அந்த வகையில இந்த ஆச்சார்யா பாடசாலாவுக்கும் ஏற்கெனவே போயிருக்கேன். பள்ளியின் இப்போதைய தலைவர் விஷ்ணு பாரத்துடன் நல்ல அறிமுகம் இருக்கு. அதனால அவர்தான் பள்ளிக்கூட அலுமினி நிகழ்ச்சிக்கு தலைவரை இன்வைட் பண்ணணும்னு கேட்டார்.
விவரத்தை ரஜினி சார்கிட்ட கொண்டு போனோம். ஸ்கூல் ப்ளஸ் காலேஜ் ரெண்டுமே அங்க படிச்சிருந்ததால் உடனே ஆர்வமா ஃபங்ஷன் பத்திக் கேட்டார். ஆனா ஷூட்டிங் ஷெட்யூல் முன்னாடியே திட்டமிட்டிருந்ததால அவரால் கலந்துக்க முடியல. அதனாலென்ன வாழ்த்துகளைச் சொல்லிடலாம்னு உடனே வீடியோவுல பேசி வாழ்த்து சொல்லிட்டார். இன்னொரு முறை அந்த ஸ்கூலுக்குப் போகணும்னும் சொல்லியிருக்கார் என்கிற திருமாறன், ஒருவேளை அன்றைய தினம் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படியான சூழல் அமைந்தால் தலைவர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.