Trump: ``அமெரிக்காவில் உற்பத்தி செய்தால், உலகிலேயே குறைவான வரி.." -டிரம்ப் சொல்வதென்ன?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக உலக பொருளாதார மன்றத்தில் பேசியுள்ளார். அதில், உலக பொருளாதாரம் தொடங்கி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
பல தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் கலந்துகொண்ட உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் ஆன்லைன் மூலம் பங்கேற்ற டிரம்ப் பேசியதாவது, "அமெரிக்க மக்களுக்கு உதவ அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு, பெருமளவில் வரியை குறைக்க உள்ளேன். அமெரிக்காவில் இயங்கும் நிறுவனங்கள் வரி சுமையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கள் பொருள்கள் மற்றும் சேவையை உற்பத்தி செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர்கள் மீது கடும் வரி திட்டங்கள் பாயும்.
எந்த தொழில் நிறுவனங்களாக இருந்தாலும், அது அமெரிக்காவில் பொருள்களை உற்பத்தி செய்தால், உலகிலேயே இல்லாத அளவுக்கான குறைவான வரியை இங்கே பெறலாம்.
அமெரிக்காவிலேயே பொருள்களை தயாரித்தால் 15 சதவிகிதமாக கார்ப்பரேட் வரி குறைக்கப்படும்.
பூமியிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் அதிகளவிலான எண்ணெய் மற்றும் வாயு உள்ளது. அதை அமெரிக்கா இனி பயன்படுத்தும். இது பொருள்கள் மற்றும் சேவைகளின் விலையை மட்டும் குறைப்பதோடு அல்லாமல், அமெரிக்காவை பெரும் உற்பத்தி சக்தியாக உருமாற்றும்.
சவுதி அரேபியா மற்றும் OPEC நாடுகள் கச்சா எண்ணெயின் விலையை குறைக்க வேண்டும். அப்படி குறைத்தாலே, ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக நிறுத்தத்திற்கு கொண்டு வந்துவிடலாம். இப்போது இருக்கும் விலையால், இந்தப் போர் தொடரத்தான் செய்யும்" என்று பேசியுள்ளார்.