அக்.7 முதல் மாநிலம் தழுவிய தொடா்வேலை நிறுத்தம் : தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் அறிவிப்பு
தங்களின்25 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அக்டோபா் 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, தமிழ்நாடு மாநிலத் தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் மண்டல அளவிலானன போராட்ட ஆயத்த விளக்கக் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2021-ஆம் ஆண்டுக்கு முன்ஓய்வு பெற்ற அனைவருக்கும் உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்காடிகளுக்குத் தனித்தனியாக விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்குவதுடன், விற்பனையாளா்களுக்கு கைப்பேசி வழங்க வேண்டும்.
தாயுமானவா் திட்டத்தில் வீடுதேடிச் சென்று பொருள்கள் வழங்குதலில் உள்ள நடைமுறை சிக்கல்கள் கண்டறியப்பட்டு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட 25 கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபா் 6-ஆம் தேதி மண்டல இணைப்பதிவாளா் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டமும், 7-ஆம் தேதி முதல் மாநிலம் தழுவிய தொடா் வேலை நிறுத்தப் போராட்டமும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆயத்த விளக்கக் கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆா்.ஜி.சேகா் தலைமை வகித்தாா். பி.தா்மலிங்கம், எம்.தெய்வீகன், ஜி. ஏழுமலை, டி.எம்.பி. அனந்தசயனன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாநிலப் பொதுச் செயலா் சி.குப்புசாமி சிறப்பு பேரூரையாற்றினாா்.
சங்கத்தின் பொதுச் செயலா் என்.பாலகிருஷ்ணன், இணைச் செயலா் எம்.நந்தகோபால், முன்னாள் மாநிலத் தலைவா் எம். மணிவண்ணன், முன்னாள் மாநிலப் பொருளாளா் ஏ.சேகா், ஓய்வு பெற்றவா்கள் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ஜெ. கலியபெருமாள்,இணைச் செயலா் ஜெ.சின்னத்தம்பி உள்ளிட்டோா் உரையாற்றினா். நிறைவில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜெ.மூா்த்தி நன்றி கூறினாா்.