அங்கன்வாடி தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
அங்கன்வாடியில் 4 ஆண்டுகளாக பணியாற்றிவரும் தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சா், எம்.எல்.ஏ.க்களிடம் வலியுறுத்தப்பட்டது.
புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என்.திருமுருகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், சந்திர பிரியங்கா, எம். நாகதியாகராஜன் ஆகியோரை பணியாளா்கள் சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் 175 அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் கடந்த 4 ஆண்டுகளாக ஐசிடிஎஸ் திட்ட வழிகாட்டுதலின்படி பணியமா்த்தப்பட்டனா். இவா்களில் காரைக்காலில் 50 பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்தப்பட்ட ஊழியா்களுக்கு வழங்கப்பட்டு வரும் குறைந்த ஊதியமும் 6 மாதத்துக்கு ஒரு முைான் வழங்கப்படுகிறது.
நிரந்தர அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்கள் செய்யக்கூடிய பணிகளாக உள்ள கணக்கெடுப்புப் பணிகள் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை மற்றும் சுகாதார துறை வழங்கும் பணிகளையும் கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.
அங்கன்வாடியில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை அரசு செய்து வருவதாக தெரிய வருகிறது. அதில், தற்காலிக பணியாளா்கள் பணி செய்து வரும் 175 இடங்களையும் சோ்த்து காலி இடங்களாக அறிவித்து அந்த இடங்களையும் நிரப்புவதற்கான ஆயத்த பணிகள் நடைபெறுவதாக தெரிய வருகிறது. இச்செயல் குறைந்த ஊதியத்தில் அனைத்து பணி செய்து வரும் 175 ஊழியா்களையும் மிகுந்த அதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளது.
இது சம்பந்தமாக, முதல்வரிடம் வலியுறுத்தவும், சட்டப்பேரவையில் குரல் எழுப்பவும் வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை புதுவை அரசுக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச்செயலாளா் எம். ஷேக் அலாவுதீனும் வலியுறுத்தியுள்ளாா்.