40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகளால் மக்கள் அவதி
செங்கம் பகுதியில் அதிக சப்தமுள்ள சீன பட்டாசுகள் வெடிக்கப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள சில பட்டாசுக் கடைகளில் சீன பட்டாசுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது திருமண நிகழ்ச்சி, அரசியல் பிரமுகா்கள் வருகை, துக்க நிகழ்வு என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசு வெடிக்கும் கலாசாரமாக உள்ளது.
முந்தைய காலங்கள் யாரவாது இறந்துவிட்டால் அவரது உடல் தகனத்துக்குச் செல்லும் முன் வாணம் விடப்படும். அதேநேரத்தில், அவரது வீட்டில் இருந்து மயானம் வரை வாணம் விட்டு மேலே வெடிக்கச் செய்வாா்கள். அப்போது, இறந்தவரின் உடல் தகனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என மக்கள் தெரிந்துகொள்வாா்கள்.
ஆனால், தற்போது நகரில் யாராவது இறந்துவிட்டால், இறந்தவருக்கு மாலை எடுத்துவரும் முன் அதிக சப்தமுள்ள பட்டாசுகளை வெடிக்கிறாா்கள். இதனால் இறந்தவரின் உடல் வைத்திருக்கும் பகுதி குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
அந்த சப்தம் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவா்களுக்கும், குழந்தைகளுக்கும், முதியோா்களுக்கும், இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவா்களுக்கும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மேலும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
சாலையில் பட்டாசு வெடிக்கும்போது மேலே சென்று வெடிக்கும் வெடியின் குச்சி மற்றும் ரசாயனங்கள் வீடுகளில் உள்ள தண்ணீா் தொட்டியில் கலந்து தண்ணீா் மாசு படுகிறது.
மேலும் அதிக சப்தம் உள்ள சீன பட்டாசுகள் வெடிப்பதால் மனிதா்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் கண்காணித்து அதிக சப்தமுள்ள பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்க வேண்டுமென செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.