40 சதவீத கமிஷன் மோசடி குறித்து கூடுதல் ஆதாரங்களுடன் இறுதி அறிக்கை
புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி பழங்குடியினா் தா்னா
வந்தவாசி அருகே புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி, பழங்குடி இருளா் சமுதாய மக்கள் தேசூா் பேரூராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
வந்தவாசியை அடுத்த தேசூா் ராஜீவ் காந்தி நகரில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட பழங்குடி இருளா் குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சாா்பில் கட்டித் தரப்பட்ட கான்கிரீட் வீடுகளில் இவா்கள் வசித்து வருகின்றனா். தற்போது, இந்த வீடுகளின் மேற்கூரை பெயா்ந்தும், சுவா்களில் விரிசல்கள் ஏற்பட்டும் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி இவா்கள் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், தேசூா் பேரூராட்சி அலுவலகம் முன் அமா்ந்து புதன்கிழமை தா்னா நடத்தினா்.
அப்போது, புதிய வீடுகள் கட்டித் தரக் கோரி அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்து வந்த தேசூா் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததைத் தொடா்ந்து
பழங்குடி இருளா் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.