`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
அதிகரிக்கும் கொரோனா தொற்று; அச்சம் கொள்ள வேண்டுமா? - மருத்துவர் சொல்வதென்ன?
நமக்கு பெரிதும் அறிமுகம் தேவைப்படாத நோய் என்றால் அது கொரோனாதான். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளில் ஆரம்பித்து இறப்பு வரை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை வைரஸ் தொற்று இது. எண்ணிலடங்காத உயிரிழப்புகளால் உலக நாடுகளே அதிர்ந்து போனது, பின்பு அவை கொரோனா வைரஸ் என கண்டறிந்து போட்ட தடுப்பூசியே என்று கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியது. எப்படியோ கொரோனா தொற்றில் இருந்து மீண்டு விட்டோம் என மன நிம்மதி அடைந்த நேரத்தில், தற்போது தென்கிழக்கு ஆசியா முழுவதும் கோவிட் வைரசின் புதிய உருமாற்றம் பரவி வருவதாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

ஒரே வாரத்தில் 4 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை!
ஒரே வாரத்தில் நான்கு மடங்காக உயர்ந்த இந்த புதிய உருமாற்ற கொரோனா பாதிப்பு, தற்போது ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றுப்பரவலை தடுக்கும் பணிகளுக்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். சீனா மற்றும் தாய்லாந்தில் புதிய பூஸ்டர் டோஸ் எடுக்குமாறு மக்களை அறிவுறுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
நம் நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த வாரம் 257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதோ 1009 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இவற்றிலும் குறிப்பாக கேரளாவில் 333 பேர் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 69 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் பேசினோம்.
"தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ், ஜே1 வகையினை சார்ந்தது. இது பெரிய அளவில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. சளி, காய்ச்சல், நுரையீரல் சார்ந்த நோய்கள், உடல் வலி போன்ற உடல் உபாதைகள் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது பாதுகாப்பு.
குறிப்பாக தொண்டை வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் சோர்வு, உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். என்றாலும், இந்தப் பிரச்னைகள் உடல் உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தக்கூடும். மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இவற்றிற்கு தடுப்பூசி அவசியம் இல்லாதது. பெரும்பாலும் மாத்திரைகள் மூலமே அறிகுறிகளை சரி செய்துவிடலாம்.
இந்த கொரோனா வைரஸ் காற்றின் மூலமாகவும், தும்மல், இருமல் போன்ற செயல்களின்போது வெளிப்படுகிற உடல் சுரப்புத்துளிகளின் மூலமாகவும் எளிதாக பரவக்கூடியது. அதனால், பொது இடங்கள், கூட்ட நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும். வெகு தூரம் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துக்கொள்ளுங்கள். மற்றபடி, இந்த புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து மக்கள் பயம் கொள்ளத் தேவையில்லை" என்கிறார் டாக்டர் ராஜேஷ்.