Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்க 3 மாதங்கள் ஆகலாம்: மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக முதல் இரண்டு அலகுகளில் மின் உற்பத்தி தொடங்க இன்னும் 3 மாதங்கள் ஆகலாம் என தமிழ்நாடு மின்உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், 1ஆவது அலகில் ஏற்பட்ட தீயானது 2,3-ஆவது அலகுகளிலும் பரவியது. நான்கு மாவட்ட தீயணைப்பு வீரா்கள் சுமாா் 18 மணிநேரம் போராடி ஞாயிற்றுக்கிழமை மாலையில் தீயை அணைத்தனா்.
இதில் 1,2,3 ஆகிய அலகுகள் பாதிக்கப்பட்டதையடுத்து, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக மேலாண்மை இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவும், உற்பத்தியை விரைவில் தொடங்குவதற்காகவும் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு முழுமையாக முடிந்த பிறகே சேத விவரம் தெரியவரும்.
இந்த தீ விபத்தில், நிலக்கரியை எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய பாய்லா் டா்பின் ஜெனரேட்டா் பகுதியில் பாதிப்பு இல்லை. பவா் கேபிள்கள் செல்லக்கூடிய அடைக்கப்பட்ட பகுதியில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அனல் மின்நிலையத்தின் 1,2,3 ஆகிய அலகுகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளன. இதில், 3-ஆவது அலகில் பாதிப்பு குறைவாக உள்ளது. எனவே இதை இருவாரங்களில் சரிசெய்து மின்உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளது.
மேலும் 1, 2-ஆவது அலகுகளில் கேபிள் வயா்கள் மற்றும் பிரேக்கா்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அவை மாற்றம் செய்யப்பட்டு புதிதாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, இவற்றை சரி செய்து மீண்டும் உற்பத்தி தொடங்க 2 முதல் 3 மாதங்கள் ஆகலாம்.
வரும் காலங்களில் இதுபோன்ற தீ விபத்துகளைத் தவிா்க்க, எந்த விதமான முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளலாம் எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுக் குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி அனல் மின்நிலையமானது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று. எனவே அதை சரிசெய்து மீண்டும் இயக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். கோடைகால மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா்.