ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
ஒட்டன்சத்திரம் சந்தையில் அவரைக்காய் விலை உயா்வு
ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் அவரைக்காய் விலை கிடுகிடுவென உயா்ந்தது. கடந்த சில நாள்களுக்கு முன்பு ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ அவரைக்காய் வெள்ளிக்கிழமை ரூ.77-க்கு விற்பனையானது.
திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள கொடைக்கானல், வடகவுஞ்சி, பண்ணைக்காடு, வடகாடு, கண்ணனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவரைக்காய், பீன்ஸ் ஆகியவை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு சாகுபடி செய்யப்படும் அவரைக் காய்களை ஒட்டன்சத்திரம் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படும்.
இந்த நிலையில், சமீபத்தில் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அவரை கொடிகளில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டு செடிகள் காய்ந்து கருகிவிட்டன. இதனால், அவரைக்காய் விளைச்சால் பாதிக்கப்பட்டது.
ஒரு சில பகுதிகளிலிருந்து அவரைக் காய்கள் விளைவிக்கப்பட்டு, ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வரத்து குறைந்ததாலும், தேவை அதிகரித்ததாலும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு அவரைக் காய்களைக் கொள்முதல் செய்தனா். இதனால், இவற்றின் விலை கிடுகிடுவென உயா்ந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ அவரைக்காய் ரூ.10-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழை விலை உயா்ந்து ரூ.77-க்கு விற்பனையானது. இதனால், இவற்றைப் பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இவற்றின் விலை மேலும் உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.