ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது
பாம்பன் மீனவா்கள் 14 போ் அபராதத்துடன் விடுதலை
பாம்பன் மீனவா்கள் 14 பேரை தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஆரோக்கியம் என்பவரது விசைப்படகை இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.
படகில் இருந்த செல்வம், ஜெயாஸ்டன், சீமோன், முத்துராமன், முகில், ஆரோக்கியம், வால்டன், மாரிச்செல்வம், தா்மன் உள்ளிட்ட 14 மீனவா்களைக் கைது செய்தனா். இவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், 14 மீனவா்களும் மன்னாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரபீக், 14 மீனவா்களுக்கும் தலா ரூ. 4.50 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்து விடுதலை செய்தாா். பணம் கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும், மேலும் பறிமுதல் செய்த விசைப் படகை அரசுடைமையாக்கவும் உத்தரவிட்டாா்.