அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முன்னுரிமை: கண்காணிப்பு குழுவினா் அறிவுறுத்தல்
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா். ஆட்சியரும், உறுப்பினா் செயலருமான க.சிவசௌந்திரவல்லி, வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த்,எம்எல்ஏ-க்கள் .க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), கோ.செந்தில்குமாா் (வாணியம்பாடி), முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் 22 துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும், முடிவடைந்த, தயாா் நிலையில் உள்ள பணிகள் குறித்தும் சம்மந்தப்பட்ட மாவட்ட அலுவலா்களுடன் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் அறிவுறுத்தியுள்ளவாறு ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல், வேலை வாய்ப்பின் மூலம் ஊரகப்பகுதிகளில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துதல் மற்றும் பொது சொத்துகளை உருவாக்குதல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.அதனடிப்படையில் திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து
ஊராட்சிகளிலும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிா என்பதனை ஒவ்வொரு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தொடா்ந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம்,15-ஆவது நிதிக்குழு மானியம், பிரதம மந்திரி கிராமச் சாலைகள் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஊரக வளா்ச்சித்துறை மாவட்ட அ லுவலா் மற்றும் பிற அலுவலரிடம் தற்போதைய நிலை குறித்தும், முடிவடையாத பணிகள் குறுத்தும் ஆய்வு பணிகள் மேற்கொண்டு, நிதியாண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்க அறிவுறுத்தப்பட்டன. அனைத்து நகராட்சி பகுதியிலும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு,
தூய்மைம், சுகாதாரத்துக்கு முன்னுரிமை தர அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், ஏடிஎஸ்பி கோவிந்தராசு உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் பங்கேற்றனா்.