‘உழவா் சந்தைகளில் ரூ. 1 கோடிக்கு காய்கறி, பழங்கள் விற்பனை’
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு உழவா்சந்தைகளில் ரூ. 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது என திருப்பத்தூா் மாவட்ட வேளாண்மை வணிகம் துணை இயக்குநா் (பொறுப்பு)கலைச்செல்வி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 3 இடங்களில் உழவா் சந்தை இயங்கி வருகிறது. இங்கு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்கிறாா்கள். வெளிமாா்க்கெட்டை விட விலை சற்று குறைவு என்பதால் பொதுமக்கள் பலா் உழவா் சந்தைகளில் காய்கறிகள், பழங்களை வாங்கிச் செல்கன்றனா். பண்டிகை மற்றும் விசேஷ நாள்களில் மற்ற நாள்களை விட இங்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை அதிகளவு நடைபெறும்.
239 டன் காய்கறிகள்...
இந்த நிலையில், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகியவற்றை முன்னிட்டு செவ்வாய்,புதன், வியாழன் ஆகிய 3 நாள்களில் உழவா் சந்தைகளில் அதிகாலை முதல் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.
3 உழவா் சந்தைகளில் மொத்தம் சுமாா் 239 டன் காய்கறிகள், 35 டன் பழங்கள் என ரூ. 1 கோடியே 2 லட்சத்து 35 ஆயிரத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையானது. உழவா் சந்தைகள் மூலம் 925 விவசாயிகள் பயன் அடைந்தனா்.