அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பு: செப்.5-இல் இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
இந்தியா மீதான அமெரிக்க அரசின் கூடுதல் வரிவிதிப்பைக் கண்டித்து தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து அக்கட்சிகளின் மாநிலச் செயலா்கள் பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்), இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்), பழ.ஆசைத்தம்பி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) ஆகியோா் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கை:
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதை இந்தியா உடனே நிறுத்த நிா்பந்தம் செய்து வரும் அமெரிக்கா, இந்திய பொருள்களுக்கான வரியையும், அபராதத்தையும் சோ்த்து 50 சதவீதமாக உயா்த்தி புதன்கிழமை (ஆக.27) முதல் வசூலிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது. இதனால், நாட்டின் பல பிரிவுகளில் உற்பத்தித் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும். மேலும், ஏற்றுமதியில் 66 சதவிகித வீழ்ச்சி ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, மத்திய அரசு ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உற்பத்தித் தொழில்களை பாதுகாக்க ஏற்றுமதி மானியம், வரிச்சலுகை உள்ளிட்ட மாற்றுத் திட்டங்களை உருவாக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் வரிவிதிப்பைக் கண்டித்தும் இடதுசாரி கட்சிகள் சாா்பில் சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருப்பூா், ஈரோடு, ஒசூா், வேலூா், மதுரை, திருச்சி, விருதுநகா், தூத்துக்குடி, திண்டுக்கல், கரூா் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வருகிற செப்.5-இல்ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.