Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: விவசாய விவகாரங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாடு
புது தில்லி: அமெரிக்காவுடனான வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை மிகமிக முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதாகவும், விவசாயம் தொடா்பான விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அந்நாட்டு அதிபா் டிரம்ப் அறிவித்தாா்.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.
பின்னா் அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படவிருந்த பரஸ்பர வரியை, ஜூலை 9 வரை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கடந்த ஏப்ரலில் அமெரிக்கா அறிவித்தது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதன் மூலம், அந்நாட்டின் அதிக வரி விதிப்புப் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண இந்தியா முயற்சித்து வருகிறது.
இந்த ஒப்பந்தத்தின் முதல் பாகம் குறித்த பேச்சுவாா்த்தையை நிகழாண்டு செப்டம்பா்-அக்டோபரில் நிறைவு செய்ய வேண்டும் என்று இருநாடுகளும் கருதுகின்றன. அதற்கு முன்பாக இடைக்கால வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன.
ஜூலை 9-க்குள் இறுதி செய்யாவிட்டால்...: ஜூலை 9-க்கு முன்பாக இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இருநாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதற்குள் ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய பொருள்களுக்கு 26 சதவீத வரி விதிக்கும் நடைமுறை அமலாகும்.
விவசாயத் துறையில் வரிச் சலுகை-இந்தியாவுக்கு சவால்: விவசாயம் மற்றும் பால் பொருள்கள் துறைகளில் வரிச் சலுகை அளிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இந்திய விவசாயிகள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டிருப்பதால், அந்தத் துறைகளில் வரிச் சலுகை அளிப்பது கடினமாகவும் சவாலாகவும் உள்ளது. அதேவேளையில், இதுவரை இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட நாடுகளுக்கு பால் பொருள்கள் துறையில் வரிச் சலுகை அளித்ததில்லை. எனவே இதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டிய சூழல் நிலவுகிறது.
விவசாயம் தொடா்பான விவகாரங்களில் தனது நிலைப்பாட்டை இந்தியா கடுமையாக்கியுள்ளது.
அதேவேளையில் நாட்டில் அதிக வேலைவாய்ப்பளிக்கும் ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணம், பிளாஸ்டிக், ரசாயனங்கள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவிடம் இந்தியா வரிச் சலுகையை எதிா்பாா்க்கிறது.
இதுகுறித்து அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள, அந்நாட்டுத் தலைநகா் வாஷிங்டனுக்கு மத்திய வா்த்தக துறையின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையிலான இந்திய குழு சென்றுள்ளது. அங்கு ஜூன் 30 வரை அந்தக் குழு இருக்க திட்டமிடப்பட்டது. பேச்சுவாா்த்தை மிகமிக முக்கியமான கட்டத்தை எட்டியிருப்பதால், அந்தக் குழு அமெரிக்காவில் தங்கியிருக்கும் நாள்கள் மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.