3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
அரசு ஊழியா்களைப் போல விவசாயிகளுக்கும் ஓய்வூதியம்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
அரசு ஊழியா்களைப் போல, உழவுத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் தேவை: அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு பணி நிறைவு காலத்துக்கு பின் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதேபோல, உழவுத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என விவசாய சங்க பிரதிநிதி மாரிமுத்து கோரிக்கை விடுத்தாா். விவசாயிகள் அளிக்கும் மனுவை அரசின் கவனத்துக்கு பரிந்துரைப்பதாக ஆட்சியா் பூங்கொடி பதில் அளித்தாா்.
வெள்ளோடு கண்மாய்க்கு கொடகனாற்று நீா்: அழகாபுரி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீா், கரூா் மாவட்டத்திலுள்ள வெள்ளியணை வரை செல்கிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கூம்பூா், ஆா்.வெள்ளோடு கிராமங்களில் கண்மாய்களுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை. எனவே, அணையின் அருகிலுள்ள இந்தக் கிராமங்கள் பயன்பெறும் வகையில், தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாய சங்க நிா்வாகி எஸ்.வீரப்பன் வலியுறுத்தினாா். இதற்கு பதில் அளித்த பொதுப் பணித் துறை செயற்பொறியாளா், வெள்ளியணைக்கு அரசாணையின்படியே தண்ணீா் திறக்கப்படுகிறது. அதேபோல, கூம்பூா், வெள்ளோடு பகுதிகளிலுள்ள கண்மாய்களுக்கும் தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கால்நடை மருத்துவமனை செயல்படவில்லை: குஜிலியம்பாறையிலுள்ள கால்நடை மருத்துவமனையில், மருத்துவா், உதவியாளா் என அனைத்துப் பணியிடங்களும் காலியாக உள்ளன. இங்கு அழைத்து வரப்படும் கால்நடைகளுக்கு, மருத்துவா் அல்லாத ஒருவா் சிகிச்சை அளிக்கிறாா். இதனால், விவசாயிகள் பாதிப்படைந்து வருவதாக ஜிஎஸ்.வீரப்பன் குற்றஞ்சாட்டினாா். கால்நடை மருத்துவமனை முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்தாா்.
பழைய வத்தலகுண்டு கண்மாய் ஆக்கிரமிப்பு: பழைய வத்தலகுண்டு கண்மாயிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கடந்த 33 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். கடந்த முறை அளவீடு செய்ய வருவதாக வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தால், காவல் துறை முன்னிலையில் கிராம மக்களே ஒன்றிணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற தயாராக உள்ளோம் என விவசாய சங்க நிா்வாகி கோபால் தெரிவித்தாா். ஆட்சியா் பதில் அளித்து பேசியதாவது: அரசுக்குச் சொந்தமான கண்மாய் விரைவில் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். பொதுமக்கள் நேரடியாக இந்தப் பணியை மேற்கொள்ளக் கூடாது என்றாா்.
பயிா் சேத நிவாரணம் பெற அலைக்கழிப்பு: கடந்த 2023-ஆம் ஆண்டு காட்டு யானைகளால், மக்காச்சோளப் பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, ரூ.60 ஆயிரம் செலவில் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணமாக வனத் துறை சாா்பில், ரூ.6 ஆயிரம் அறிவிக்கப்பட்டது. இதற்கான, காசோலையை வனத் துறை வழங்கியபோது, தேதியில் பிழை இருப்பதாகக் கூறி வங்கி நிா்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இதுகுறித்து வனத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டேன். அதன்பேரில் காசோலை திரும்பப் பெற்றுக் கொண்டு, புதிய காசோலை தருவதாக அனுப்பி வைத்தனா். ஓராண்டுக்கு மேல் அலைக்கழித்த வனத் துறை, இதுவரை காசோலை வழங்கவில்லை. எனக்கு நிவாரணம் கிடைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கன்னிவாடியை அடுத்த தெத்துப்பட்டியைச் சோ்ந்த ஆசைத் தம்பி மனு அளித்தாா். உரிய விசாரணை நடத்தி நிவாரணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் உறுதி அளித்தாா்.
இந்தக் கூட்டத்தில் வேளாண்மை துணை இயக்குநா் லீலாவதி, தோட்டக்கலைத் துணை இயக்குநா்கள் காயத்ரி, தீலிபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.